--- --:--:-- --

வழக்கம் போல உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்ற ஏற்பாடு!

1

திருப்பரங்குன்றதட்டில் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் தீபம் ஏற்றுவதற்காக கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தை சுற்றிலும் 12 எஸ்பி தலைமையில் சுமார் ஆறாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இச்சூழ்நிலையில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163வின் கீழ், திருப்பரங்குன்றம் உள்பட, மதுரை மாவட்டத்தின் எந்த பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கும், போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கும் எவருக்கும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தடை உத்தரவு 25 ஆம் தேதி காலை 10 மணி வரை 37 மணி நேரம் அமலில் இருக்கும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேநேரம், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் குழுவுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே, திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை, கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகள் RED ZONE ஆக அறிவிக்கப்பட்டு, டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலையடிவார பகுதிகளில் 1800 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பரங்குன்றம் பரபரப்பாகி இருக்கும் நிலையில் தீபத்தூணை சுற்றி வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் தற்போது அகற்றப்பட்டிருக்கிறது.
அதேநேரம், திருப்பரங்குன்றம் கோவிலில் இருந்து உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றுவதற்கு தாமிர கொப்பரை எடுத்துச் செல்லப்பட்டது.

 

 

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் அருகே வழக்கமான இடத்தில் மாலை 6 அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட உள்ளது. தீபம் ஏற்றுவதற்கான தாமிரக் கொப்பரை, 40 டின் நெய், 400 மீட்டர் காடா துணி உள்ளிட்ட பொருட்களை கோவில் பணியாளர்கள் பூஜை செய்து எடுத்துச் சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon