பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைப்பு..!
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், திருப்பரங்குன்றத்தை சுற்றிலும் 12 எஸ்பி தலைமையில் சுமார் ஆறாயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இச்சூழ்நிலையில் சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் மதுரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதித்து மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிஎன்எஸ்எஸ் சட்டப்பிரிவு 163வின் கீழ், திருப்பரங்குன்றம் உள்பட, மதுரை மாவட்டத்தின் எந்த பகுதியில் பொதுமக்கள் கூடுவதற்கும், போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவதற்கும் எவருக்கும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு 25 ஆம் தேதி காலை 10 மணி வரை 37 மணி நேரம் அமலில் இருக்கும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேநேரம், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் குழுவுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளார். இதனிடையே, திருப்பரங்குன்றம் நுழைவு வளைவு முதல் 16 கால் மண்டபம் வரை செல்லும் சாலை, கிரிவலப் பாதைக்கும் மலை அடிவாரப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதிகள் RED ZONE ஆக அறிவிக்கப்பட்டு, டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலையடிவார பகுதிகளில் 1800 போலீஸார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத் தூணை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். நயினார் நாகேந்திரன் இன்று திருப்பரங்குன்றம் சென்று தீபம் ஏற்ற அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி பெருமாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் நயினார் நாகேந்திரன் வசித்துவரும் நிலையில் அவரது வீட்டைச் சுற்றி 40க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நயினார் நாகேந்திரன் வீட்டை விட்டு வெளியேறினால் அவரை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வீட்டு காவலுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். திருப்பரங்குன்றம் சென்றால் செல்லும் வழியில் கைது செய்து கொள்ளுங்கள், வீட்டில் கைது செய்யக் கூடாது என நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதனை அறிந்த பாஜக தொண்டர்கள் அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர். இதனால் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து திருநெல்வேலியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், “இன்று மதியம் திருப்பரங்குன்றம் செல்கிறேன்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தீபம் ஏற்றப்படுகிறதா இல்லையா என்பதை பார்க்க திருப்பரங்குன்றம் செல்கிறேன். உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று இன்று தீபம் ஏற்றவில்லை என்று சொன்னால் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை முழுக்க முழுக்க ஒரு கிறிஸ்துவராக தான் பார்க்க முடியம். உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிக்கிற முதல் முதலமைச்சராக கருத முடியும். திருப்பரங்குன்றம் விஷயத்தில் இவ்வளவு பதற்றம் தேவையில்லை. தீபம் ஏற்றுவதாக சொல்லிவிட்டு கலெக்டர் தலைமையில் தெப்பம் ஏற்றினாலும் போதும்” என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





