புதுச்சேரியில் அதிகரிக்கும் டெங்கு – 2 பேர் மரணம்
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, மேலும் 1,300 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், டெங்கு தடுப்பு நடவடிக்கை எடுக்க புதுச்சேரி முதல்வரிடம் சபாநாயகர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நடப்பாண்டில் இதுவரை 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், டெங்கு காய்ச்சலுக்கு இளைஞர் மற்றும் கல்லூரி மாணவி என இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த முகமது இர்பான் (22) என்ற இளைஞர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், மூலகுளம் பிச்சைவீரன்பேட் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஹரிணி (19) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் டெங்கு பாதிப்பு 1,300 ஆக அதிகரித்துள்ளதுடன், இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தநிலையில், புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் தற்காலிக சட்டப்பேரவைத் தலைவரும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க செயலாளருமான அன்பழகன் சந்தித்து இன்று மனு அளித்தார்.அந்த மனுவில், புதுச்சேரி மாநிலத்திலும் சமீப நாட்களாக டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகத் தொடர்ந்து தகவல்கள் வருகின்றன. குறிப்பாக, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் தினசரி 50-க்கும் மேற்பட்ட டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. டெங்கு பாதிப்பினால் இரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும் நோயாளிகளுக்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் உரிய சிகிச்சையும், தேவைக்கேற்ப இரத்தத் தட்டணுக்கள் செலுத்துதல் உள்ளிட்ட மருத்துவ உதவிகளும் தொடர்ந்து அளிக்கப்பட வேண்டியுள்ளது. இருப்பினும், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசு பொது மருத்துவமனையில் போதுமான படுக்கை வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலை கவலைக்குரியதாக உள்ளது.
குறிப்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகத் தெரியவருகிறது. இதனால் பணியில் உள்ள செவிலியர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாகி வருவதுடன், நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிப்பதிலும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். செவிலியர்கள் தங்களது பணிச்சுமை மற்றும் பணியிடப் பற்றாக்குறை தொடர்பாக உள்ளிருப்புப் போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், பொதுமக்களின் உயிர் மற்றும் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில், முதலமைச்சர் நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தற்போதைய மருத்துவத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசு பொது மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், டெங்கு உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக, கீழ்க்கண்ட நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஒருங்கிணைந்த கொசு ஒழிப்புப் பணி: உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை, கொசு ஒழிப்புப் பிரிவு மற்றும் சுகாதாரத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து புதுச்சேரி மாநிலம் முழுவதும் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.கொசு மருந்து தெளித்தல்: கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகும் பகுதிகளைக் கண்டறிந்து, உரிய வழிகாட்டுதல்களின்படி கொசு ஒழிப்பு மருந்துகளைத் தெளித்தல் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
கழிவுநீர் வடிகால்களைச் சீரமைத்தல்: சாலைகளின் இருபுறங்களிலும் சேதமடைந்துள்ள கழிவுநீர் வடிகால்களை உடனடியாகச் சீரமைத்து, நீர் தேங்காமல் சீரான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பு நடவடிக்கை: புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் டெங்கு நோய் கண்டறிதல், விழிப்புணர்வு, பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.
மருத்துவ வசதிகளை மேம்படுத்துதல்: அரசு பொது மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் மற்றும் தேவையான மருத்துவ உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பொதுமக்கள் விழிப்புணர்வு: வீடுகள், காலி மனைகள், மொட்டை மாடிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுதல், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைத்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





