பாலியல் புகாரில் அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது..!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஞானவேல் பாசு என்பவர், மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட இளங்கலை இறுதியாண்டு மாணவி, கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தப் பேராசிரியர் தனக்குத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி வாயிலாகவும் நேர்முகமாகவும் மன உளைச்சல் மற்றும் தொல்லை கொடுத்து வந்ததாகக் காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்படி புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த பேராசிரியரைத் தேடி வந்த காவல்துறையினர், திருநெல்வேலி அருகே உள்ள வள்ளியூரில் இருக்கும் அவரது உறவினர் வீட்டில் வைத்து அவரைக் கைது செய்தனர். பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட அவர், சனிக்கிழமை அன்று நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்தப் பேராசிரியர் மீதான கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட அடுத்த நாளே, அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் நான்கு மாணவிகள் அவர் மீது பரபரப்பு புகார்களைத் தெரிவித்துள்ளனர். அவர்கள் காவல்துறையிடம் முறைப்படி தனித்தனியாகப் புகார் அளிக்கவில்லை என்றாலும், வழக்கைப் புலனாய்வு செய்து வரும் விசாரணைக் குழுவிடம் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.





