தமிழகப் பள்ளிகளுக்கு ஏப். 17 முதல் கோடை விடுமுறை..!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாகவும், மீண்டும் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, 1 முதல் 5-ம் வகுப்பு வரை: ஏப்ரல் 6 முதல் 16-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். 6 முதல் 9-ம் வகுப்பு வரை: ஏப்ரல் 1 முதல் 16-ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும். தேர்வுகள் முடிந்த கையோடு, ஏப்ரல் 17 முதல் மாணவர்களுக்கு விடுமுறை தொடங்குகிறது. இந்த கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு மொத்தம் 48 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், பள்ளி வளாகங்கள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட உள்ளன. தேர்தல் பணிகளை தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக, வழக்கத்தை விட முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அந்த சமயத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால், திறப்பு தேதி தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான வினாத்தாள்களை எமிஸ் (EMIS) இணையதளத்தில் இருந்து மார்ச் 30-ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடவாரியாகவும், பயிற்று மொழி வாரியாகவும் வினாத்தாள்களை நகலெடுத்து, அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு விநியோகிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.





