--- --:--:-- --

சென்னை விமான நிலையத்தில் திடீரென பரவிய புகை..!

6

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது தளத்தின் புறப்பாடு பகுதியில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் டிக்கெட் விற்பனை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் விற்பனை அலுவலகத்தில் இன்று பிற்பகல் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.

 

இதனையடுத்து, துரிதமாக செயல்பட்ட மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் பணியாளர்கள் மற்றும் பயணிகளை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர். மேலும், அவசர கால தீயணைப்பான்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். ஆனால் அதிக அளவில் புகை சூழ்ந்து இருந்ததால் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், தீயை அணைக்க முடியாமல் திணறினர்.

 

இந்த நிலையில் சென்னை விமான நிலைய தீயணைப்புத் துறையின் இரண்டு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயை அணைத்ததோடு புகை மண்டலத்தையும் வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இந்த தீயை முழுவதுமாக அணைக்க சுமார் 40 நிமிடங்கள் ஆனது என்று கூறப்படுகிறது.  இச்சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

விசாரணையின் முதற்கட்ட தகவலில்படி மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தீ விபத்தால் 10-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு தாமதமானதாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon