--- --:--:-- --

இந்தி பெயர் பலகை விவகாரம் – 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்

6

தூத்துக்குடி மாவட்டத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகைகளில் இந்தியில் ஊர் பெயர் எழுதப்பட்டிருந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டி பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமின்றி இந்தியிலும் ஊர் பெயர் எழுதப்பட்டிருந்தது.

 

 

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயில், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல் மின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வரும் வெளிமாநிலத்தவர் எளிதில் அறிந்து கொள்வதற்காக இந்தி மொழி இடம்பெற்றதாக விளக்கம் அளித்தனர். அதேவேளையில் இரவோடு இரவாக இந்தி எழுத்து மீது ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டது.

 

வழிகாட்டி பலகையில் இந்தி இடம்பெற்றதற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதுவரை மத்திய அரசின் இந்தி திணிப்பைத்தான் தமிழ்நாடு எதிர்கொண்டு வந்ததாகவும், தற்போது, மாநில அரசே அந்தப் பணியைச் செய்வதுதான் அவர்கள் சொன்ன மாற்றம் போல எனவும் விமர்சித்துள்ளார். எல்லாவற்றிலும், ஆழம் பார்த்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் ‘U Turn’ அடிக்கும் த.வெ.க. அரசின் மற்றுமொரு முயற்சியா இது? என கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டின் உயிர்க்கொள்கை எனவும், அதில் விளையாட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

இந்நிலையில் வழிகாட்டி பெயர் பலகையில் இந்தி இடம்பெற்றது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை தூத்துக்குடி உதவி கோட்ட பொறியாளர் பூமிநாதன் மற்றும் களக்காடு பிரிவு உதவி பொறியாளர் முத்துலட்சுமி ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon