--- --:--:-- --

மாநில நெடுஞ்சாலை வழிகாட்டி பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் இரவோடு இரவாக மறைப்பு!

5

தூத்துக்குடியில் உள்ள சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள வழிக்காட்டி பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இரவோடு இரவாக இந்தி எழுத்துகள் ஸ்டிக்கர் ஓட்டி மறைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில், மாநில நெடுஞ்சாலைத்துறையின் SH-93 சாலைப் பகுதியில் புதிதாக பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வழிகாட்டிப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

 

 

இந்த வழிகாட்டிப் பலகையில் திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றிருந்தன. வழக்கமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே ஊர் பெயர்கள் இடம்பெறும் நிலையில், இந்தப் புதிய பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியிலும் ஊர் பெயர்கள் பெரிய அளவில் இடம்பெற்றிருந்தது பொதுமக்களிடையே கவனத்தை ஈர்த்தது.

 

 

தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயர்களை தமிழில் இடம்பெறச் செய்ய வேண்டும் என அரசு வலியுறுத்தி வரும் நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழி இடம்பெற்றிருப்பது குறித்து சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் விவாதம் எழுந்தது. மாநில அரசே இந்தி திணிப்பை செய்வது தான் தவெக அரசின் மாற்றமா என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

 

இந்த நிலையில், நேற்று இரவு வழிகாட்டிப் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துக்கள் அனைத்தும் பச்சை நிற ஸ்டிக்கர் மூலம் மறைக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள பெயர்கள் மட்டுமே வெளிப்படையாகத் தெரியும் வகையில் பலகை காணப்படுகிறது.

 

 

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, சாத்தான்குளம் அமைந்துள்ள பகுதி கன்னியாகுமரி–தூத்துக்குடி இடையேயான முக்கிய போக்குவரத்து பாதையாக இருப்பதாகவும், அருகில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல் மின் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பொதுமக்கள் இப்பகுதிக்கு வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் ஊர்களின் பெயர்களை எளிதில் அறிந்து கொள்வதற்காக தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் பெயர்கள் இடம்பெறச் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது இந்தி எழுத்துக்கள் மட்டும் இரவோடு இரவாக ஸ்டிக்கர் மூலம் மறைக்கப்பட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon