தாராபுரம் மளிகை கடையில் இறங்கி விலை விசாரித்த ஸ்டாலின்!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தி.மு.க வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், பிரசாரத்தின் இடையே மளிகைக் கடையில் இறங்கி நேரடியாக விலைவாசியைக் கேட்டறிந்தார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், தற்போதைய த.வெ.க ஆட்சி “வேலைக்கு ஆகாத வேஸ்ட் ஆட்சி” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையில் காங்கிரஸ், வி.சி.க, ஐ.யூ.எம்.எல், சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் த.வெ.க ஆட்சி அமைத்தது.
இதைத் தொடர்ந்து, மதுராந்தகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ சத்யபாமா ஆகிய இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்தனர்.
அதே போல, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எஸ்.ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர். பெரம்பூர், திருச்சி கிழக்கு 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற த.வெ.க தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால், தமிழ்நாட்டில் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில் பெருந்துறை, அம்பாசமுத்திரம், திருச்சி கிழக்கு, விறாலிமலை, கரூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க சார்பில் மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் போட்டியிருகின்றனர். எதிர்க்கட்சி தி.மு.க சார்பில், மதுராந்தகத்தில் பரந்தாமனும் தாராபுரத்தில் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தலைவர்கள் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டுவருகின்றனர்.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் உச்சக்கட்டப் பிரச்சாரத்தை எட்டியுள்ள நிலையில், இத்தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் எஸ். சுகன்யாவை ஆதரித்து, தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 2, 2026) தாராபுரத்தில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்று காலை 10.30 மணியளவில் தாராபுரம் அமராவதி சிலையிலிருந்து தனது பிரச்சாரப் பயணத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அங்கிருந்து திறந்த வேனில் அமர்ந்தபடி பொள்ளாச்சி சாலை மற்றும் பெரியகடை வீதி வழியாகப் பிரம்மாண்ட ரோடு ஷோ (சாலை வலம்) நடத்தினார். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு மலர்களைத் தூவியும், வாழ்த்தொலிகளை எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தபடி மு.க.ஸ்டாலின் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
தாராபுரத்தில் பிரசாரத்தின்போது ஒரு மளிகைக் கடைக்குள் சென்ற மு.க.ஸ்டாலின், விலைவாசி எல்லாம் எப்படி இருக்கிறது என்று கடைக்காரரிடம் விசாரித்து உரையாடினார். இப்போது அரிசி விலை எவ்வளவு என்று ஸ்டாலின் கேட்டதற்கு கடைக்காரர், 1800 ரூபாய் என்று கூறினார். இதையடுத்து, தி.மு.க ஆட்சியில் இந்த அரசி விலை எவ்வளவு இருந்தது என்று கேட்டார் அதற்கு, கடைக்காரர் அப்போது அரிசி விலை 1500 ரூபாய் என்று கூறினார். இதையடுத்து, ஸ்டாலின் கேள்விக்கு விலைவாசி உயர்வால் பாதிப்பு இருப்பதாக கடைக்காரர் கூறினார். பின்னர் அவர்களுடைய குடும்பத்தினரையும் நலம் விசாரித்தார். அவர்களிடம், தாராபுரம் தி.மு.க வேட்பாளர் எஸ்.சுகன்யாவுக்க்கு உதயசூரியன் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், விலைவாசி உயர்வு குறித்து, ‘இது வேலைக்கு ஆகாத வேஸ்ட் ஆட்சி’ என த.வெ.க ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “எம்.எல்.ஏ ஷாப்பிங்கில் (MLA Shopping) மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட ஷாப்பிங் (shopping) செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?
தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது. அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது.
இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாகத் தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத வேஸ்ட் (Waste) ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான தமிழ்நாடு வழிகாட்டி-யில் (Guidance TN) இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




