--- --:--:-- --

பொங்கல் பரிசு டோக்கன் எப்போது விநியோகம்?

1

2025ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

 

அதன்படி 2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

 

இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள் என கூறப்பட்டது. மேலும் இதனால் அரசுக்கு ரூ. 249.76 கோடி செலவு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

டோக்கனில் நாள், நேரம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும் எனவும், தங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Right Menu Icon