நான்கு வயது சிறுவன் கடத்தல்.. வாழை தோப்பில் தவிக்க விட்ட கடத்தல்காரன்..!
சேலம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக நான்கு வயது சிறுவனை கடத்தி வாழை தோப்பில் விட்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். எடப்பாடி அருகே உள்ள தேவூர் வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் மகனான நான்கு வயது சிறுவன் நேற்று மாலை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் மாயமான சிறுவனை தேடிப்பார்த்த அவனது பெற்றோர் தேவூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுவன் அதே பகுதியில் உள்ள வாழை தோப்பில் மயங்கிய நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் லோகநாதனுக்கும் அந்த பகுதியை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.





