ஏ.வ. வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2ம் நாளாக வருமான வரித்துறை ரெய்டு!
திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளராக ஏ.வ. வேலு களமிறக்கப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சரான வேலு ஆதரித்து நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஸ்டாலின் திருவண்ணாமலையில் உள்ள நிலையில், வேலுவுக்கு சொந்தமான கல்லூரி, வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
தேர்தலுக்காக பணம் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தாக கூறி வருமானவரித்துறையினர் கல்லூரி, வேலுவுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் சோதனை செய்தனர். அதன்படி, வேலுவுக்கு சொந்தமான 16 இடங்களில் நேற்று இரவும் சோதனை நீடித்தது.
வேலுவுக்கு சொந்தமான இடங்களில், சுமார் 19 மணி நேரத்தை கடந்து இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு மற்றும் திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடுகள், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.
முன்னதாக திமுக வேட்பாளர் எ.வ வேலு வீட்டில் நடைபெற்று வரும் வருமானவரித்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்த மு.க. ஸ்டாலின் “தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் பாஜகவை தூண்டிவிட்டு வருமான வரித்துறை சோதனையை அதிமுக அரசு செய்ய வைக்கிறது. இது போன்ற செயல்கள் அதிமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சோதனைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




