மாமூல் வராததால் த.வெ.க ஆட்சியை கவிழ்க்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் திட்டம்?
சென்னை கோட்டூரபுரம் அண்ணா நூலகத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, த.வெ.க ஆட்சி அமைந்ததும் மாமூல் வராததால் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆட்சியை கவிழ்க்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.அதாவது, மாதம் மாதம், லட்ச லட்சமாக, கோடி கோடியாக கரங்களில் பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், கில் போன்ற நேர்மையான அதிகாரிகளை தவிர பலர் மாசம் மாசம் நம்ம கஜானாவுக்கு வழக்கமாக வந்து கொண்டிருந்தது. விஜய் ஆட்சிக்கு வந்ததும் நின்று போய்விட்டதே. இந்த அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அது நடக்காது என்றார்.
வைகோவின் இந்த கருத்து பேசுப்பொருளான நிலையில், இது குறித்து அரசியல் ஆலோசகரும் தமிழக பா.ஜ.க.,வின் முன்னாள் ஊடகப் பிரிவு தலைவருமான சுப்பிரமணிய பிரசாத் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தன்னை ஒரு மூத்த அரசியல்வாதி என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் வைகோ, அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஊழலுக்கு வழிவகுக்காமல் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என ஆக்கப்பூர்வமான வழிகாட்டுதல்களை வழங்கியிருக்க வேண்டும்.
அதற்குப் பதிலாக, குறுகிய அரசியல் உள்நோக்கத்துடன் அரசு அதிகாரிகளை கொச்சைப்படுத்தும் வகையிலும், நிர்வாக அமைப்பின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்திலும் ம.தி.மு.க தரப்பில் பேசப்பட்டிருப்பது இந்திய அரசியல் சாசனச் சட்டத்திற்கும், ஜனநாயக மாண்புகளுக்கும் எதிரானது.
லட்சம் லட்சமாக வந்து கொண்டிருந்த மாமூல் வராததால் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் த.வெ.க ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்கிறார்கள் என்று அரசியல் உள்நோக்கத்துடன், பொத்தாம் பொதுவாக, குற்றம் சாட்டியது குறித்து வைகோ, தமிழக காவல்துறையும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும் உரிய விசாரணை நடத்தி, அவரிடம் ஆதாரங்களை கேட்டு பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகோ பேசியது பொய் என்று நிரூபிக்கப்பட்டால் அவர் மீது தமிழக அரசு சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயநல அரசியல் ஆதாயங்களுக்காக அரசு இயந்திரத்தைக், களங்கப்படுத்துவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





