--- --:--:-- --

பாலியல் துன்புறுத்தல் புகார் : பிரபல வயலின் கலைஞர் எச்.என். பாஸ்கர் அமெரிக்காவில் கைது!

8

சென்னையைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசை வயலின் கலைஞர் எச்.என். பாஸ்கர் மீது, சிறுமி ஒருவருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமெரிக்காவில் நான்கு கடுமையான குற்றவியல் வழக்குகள் (felony charges) பதிவு செய்யப்பட்டுள்ளன. 50 வயதான வயலின் கலைஞரான எச்.என். பாஸ்கருக்கு எதிராக நவம்பர் 6, அன்று சான் டியாகோ உயர் நீதிமன்றத்தில் (San Diego Superior Court) குற்றவியல் புகார் தாக்கல் செய்யப்பட்டது.

 

 

பாஸ்கர் நவம்பர் 6 அன்று நியூயார்க்கில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார்; தொடர்ந்து நவம்பர் 7 அன்று பாஸ்டனில் உள்ள தாமஸ் டல் கச்சேரி அரங்கில் (Thomas Tull Concert Hall) இசை நிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில், அவர் பாஸ்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

பாஸ்கருடன் தொடர்ந்து இணைந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா, இது குறித்து தனது சமூக வலைதளத்தில் ‘ஆழ்ந்த மனவேதனை’ (Deeply disturbed) என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “நான் எண்ணற்ற மேடைகளைப் பகிர்ந்து கொண்ட சக கலைஞரும், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான நண்பருமான ஒருவர் மீது அமெரிக்காவில் மிகக் கடுமையான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

 

 

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் எனது உறுதிப்பாடு எப்போதும் மாறாதது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார். மேலும், “எனக்குள் மிகுந்த கோபமும் வருத்தமும் நிறைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக நிற்கிறேன்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

பின்னணிப் பாடகி சின்மயி ஸ்ரீபாதா தனது சமூக வலைதளப் பதிவில், கர்நாடக இசை மற்றும் பாரம்பரிய நடன வட்டாரங்களைச் சாடியுள்ளார். இத்துறைகள் மிகவும் நெருக்கமானவை மற்றும் சுரண்டல் நிறைந்தவை” என்றும், இங்கு அனைவருக்கும் அனைவரையும் தெரியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

குருமார்கள் உங்கள் தொடைகளில் தாளம் போட விரும்புவது மிகவும் சாதாரணமான விஷயம்; முதுகில் உரசுவது, தங்கள் வீட்டு அறையில் இறுக்கமான அரைக்கால் சட்டை அணிந்துகொண்டு வயலின் வில்லை (bow) எப்படிப் பிடிப்பது என்று கற்றுக்கொடுப்பது என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதற்கு எதிராகக் குரல் கொடுத்த, இதற்கான முறையான அமைப்புகளை உருவாக்க முயற்சித்த இளைஞர்களை இந்த மொத்தக் கூட்டமும் இசை வட்டாரங்களில் நிகழ்ச்சிகள் நடத்த விடாமல் மறைமுகமாகத் தடை செய்தது (shadowbanned),” என்று அவர் எழுதியுள்ளார்.

 

ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெறவிருந்த பாஸ்கரின் அமெரிக்க இசைப் பயணத்தின் போது இந்தக் குற்றச்செயல்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது. சான் டியாகோ உயர் நீதிமன்றத்தின் வழக்கு ஆவணங்களில் கிடைக்கப்பெற்ற விவரங்களின்படி, அடுத்தகட்ட விசாரணைத் தேதிகள் எதுவும் பட்டியலிடப்படவில்லை.

 

 

செப்டம்பர் 26 அன்று பாஸ்கர் இசை நிகழ்ச்சி நடத்திய சான் டியாகோவில் உள்ள இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி (IFAASD), நவம்பர் 23 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், பாஸ்கர் தொடர்பான பொதுவெளியில் வெளியான குற்றச்சாட்டுகள் தங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், “கலை சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள கவலையை தாங்கள் உணர்வதாகவும்” தெரிவித்துள்ளது.

 

 

மேலும் “எங்கள் சமூகத்தின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான விஷயங்களை இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி (IFAASD) தீவிரமாகக் கருதுகிறது. எந்த வடிவிலான துஷ்பிரயோகம், துன்புறுத்தல், சுரண்டல் மற்றும் தகாத நடத்தையையும் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

மைசூரில் பிறந்து வளர்ந்த பாஸ்கர், தனது பெற்றோரான வயலின் கலைஞர் எச்.என்.நரசிம்ம மூர்த்தி மற்றும் கர்நாடக இசைப் பாடகியும் குருவுமான எச்.என்.ராஜலட்சுமி ஆகியோரிடம் இசை பயின்றார். அதைத் தொடர்ந்து, வயலின் மேதை எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் மூத்த பாடகர் ஆர்.என். தியாகராஜன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon