அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகப் போராடி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், வரும் டிசம்பர் 22-ம் தேதி அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. வரும் 22-ம் தேதி காலை 10:00 மணிக்கு, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையிலான குழு இந்த ஆலோசனையை மேற்கொள்ளும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுக்கு இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கப்பட வேண்டும். அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசின் நிலைப்பாடு மற்றும் எடுக்கப்படவுள்ள முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




