எதிர்ப்புகளுக்கு இடையே ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றியது மத்திய அரசு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 2025 அவையின் மையப்பகுதிக்கு வந்து தாள்களைக் கிழித்து எறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போராட்டங்களுக்கு இடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்துக்கு (MGNREGA) மாற்றாக விக்சித் பாரத்-கேரண்டி ஃபார் ரோஸ்கார் அண்ட் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) மசோதா, 2025 (வி.பி ஜி ராம் ஜி – VB-G RAM G) வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அன்றைய தினத்திற்கான அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்த மசோதா உறுதி அளிக்கப்பட்ட வேலை நாட்களை 100-லிருந்து 125-ஆக உயர்த்துகிறது, ஆனால் நிதி வழங்கும் முறையை மாற்றுகிறது. எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ (MGNREGA)-வின் கீழ், ஊதியத்திற்கான முழு நிதியையும், உபகரணச் செலவில் முக்கால்வாசிப் பங்கையும் மத்திய அரசு வழங்கியது – மாநிலங்கள் உபகரணச் செலவில் மூன்றில் ஒரு பங்கு, நிர்வாகச் செலவுகள், வேலையில்லா கால உதவித்தொகை மற்றும் இழப்பீடு ஆகியவற்றை வழங்கின.
புதிய மசோதாவின் கீழ், மத்திய அரசு அனைத்துச் செலவுகளிலும் 60 சதவீதத்தையும், மாநிலங்கள் 40 சதவீதத்தையும் வழங்கும். புதிய மசோதாவின் கீழ், ஒவ்வொரு நிதியாண்டிலும் மாநில வாரியான நெறிமுறை ஒதுக்கீட்டை மத்திய அரசு தீர்மானிக்கும், மேலும் நெறிமுறை ஒதுக்கீட்டிற்கு மேலான கூடுதல் செலவினங்களை மாநிலங்களே ஏற்கும்.
இந்த மசோதா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டபோது, அதைத் திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. புதன்கிழமை, இந்த மசோதா குறித்து மக்களவையில் 8 மணி நேரம் விவாதம் நடந்தது, இது நள்ளிரவைத் தாண்டி அதிகாலை 1.30 மணி வரை நீடித்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து ‘எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ’ என்று முழக்கமிட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே, மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வியாழக்கிழமை விவாதத்திற்குப் பதிலளித்தார்.
மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் தனது பதிலில், அரசாங்கத்தின் பதிலைக் கேட்காமல் தாங்கள் விரும்புவதைச் சொல்வது எதிர்க்கட்சிகளின் வன்முறை என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் மகாத்மா காந்தியின் போதனைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றும் கூறினார். மேலும், தான் “மகாத்மா காந்தியின் பாதங்களில் தலைவணங்குவதாக சிவராஜ் சிங் சவுகான் கூறினார். காந்தியே அரசாங்கத்தின் உத்வேகம் என்றும் ஆளுங்கட்சி அவரது போதனைகளைப் பின்பற்றுவதாகவும் உறுதிபடத் தெரிவித்தார்.
“எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ (NREGA) திட்டத்திற்கு முதலில் மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்படவில்லை. 2009 தேர்தல்கள் வந்தபோதுதான் அவர்களுக்கு பாபு (காந்தி) நினைவுக்கு வந்தார், அப்போதுதான் அவர் பெயரைச் சேர்த்தார்கள். ஆனால், யாராவது அதைச் சரியாகச் செயல்படுத்தினார்கள் என்றால், அது பிரதமர் நரேந்திர மோடிதான்,” என்று சிவராஜ் சிங் சவுகான் கூறினார். “அவர்கள் நாடகம் ஆடுகிறார்கள். மோடி அரசு உண்மையில் வேலை செய்கிறது.”
யு.பி.ஏ அரசாங்கத்தின் கீழ் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ-வுக்கான செலவினம் சுமார் ரூ. 2,13,220 கோடியாக இருந்தது என்றும், மோடி அரசாங்கத்தின் கீழ் அது சுமார் ரூ. 8,53,810 கோடியாக இருந்தது என்றும் சிவராஜ் சிங் சவுகான் கூறினார். யு.பி.ஏ அரசாங்கத்தை விட மோடி அரசாங்கம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த அவர் பிற புள்ளிவிவரங்களையும் வழங்கினார். “எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ-வில் பல குறைபாடுகள் இருந்தன. அதற்குப் பதிலாக புதிய மசோதாவைக் கொண்டு வந்துள்ளோம்” என்று சவுகான் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





