தூத்துக்குடியில் பசுமை தாமிர ஆலை..!
தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைக்கு மாற்றாக, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ‘பசுமை தாமிர உற்பத்தி ஆலை’ அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கைத் தாக்கல் செய்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மாசு காரணங்களைக் காட்டி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றமும், பின்னர் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்து ஆலையை மூடியது இறுதியானது. இந்தச் சூழலில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் பசுமை தாமிர ஆலை அமைக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பசுமை தாமிர ஆலை அமைக்க அனுமதி கோரி தமிழக தொழில்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர்களுக்கு கடந்த ஜூன் முதல் நவம்பர் வரை 6 முறை மனுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால், அந்த மனுக்கள் மீது இதுவரை எந்தப் பரிசீலனையும் செய்யப்படவில்லை. எனவே, எங்களது கோரிக்கையைப் பரிசீலிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
மேலும், இந்த ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:வேதாந்தா நிறுவனம் அரசுக்கு மனுக்கள் மட்டுமே அனுப்பியுள்ளது, முறையான எந்த விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
ஏற்கனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள அபாயகரமான கழிவுகளை அகற்றவும், அந்த ஆலையை இடிக்கவும் கோரிய பொதுநல வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே நிலுவையில் உள்ள பொதுநல வழக்குடன் இந்த புதிய மனுவையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தூத்துக்குடியில் மீண்டும் ஆலை அமைக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவது அப்பகுதி மக்களிடையே மீண்டும் பேசு பொருளாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




