காலியாகும் அதிமுக கூடாரம்! இபிஎஸ்-ஆல் தவெகவுக்கு தாவும் மாஜிக்கள்..! தங்கமணி, சி.வி. சண்முகம் போர்க்கொடி..!

வெகவில் சேர்ந்த செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கிய பதவி கிடைத்த உற்சாகத்தில் அதிமுக மாஜி அமைச்சர்கள் சிலரும் விஜய் கட்சிக்கு தூதுவிட்டுள்ளனர். மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் அதிமுக கரைவதை கண்டு, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் எதிராக வாய்ஸ் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

 

அதிமுக கோட்டையில் இப்போது அதிருப்தி குரல்கள் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கிவிட்டன. ஒரு காலத்தில் அதிகார மையமாக இருந்த அந்தக் கட்சியின் கதவுகள் மெல்ல மெல்லத் திறந்து, முக்கியஸ்தர்கள் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, அதிமுகவின் பழைய முகங்கள் அணிவகுப்பதாகக் கிளம்பியுள்ள தகவல், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சிக்குள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த வெளியேற்ற நாடகத்தின் “பவுண்டரி லைன்” நட்சத்திரமாகத் திகழ்கிறார் முன்னாள் அமைச்சரும், மூத்த நிர்வாகியுமான செங்கோட்டையன். அதிமுகவின் பலம் வாய்ந்த தூண்களில் ஒருவராகக் கருதப்பட்ட அவர், விஜய்யின் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்ததோடு மட்டுமல்லாமல், அங்கே நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ற முக்கியப் பதவியையும் பெற்றுவிட்டார்.

 

செங்கோட்டையனுக்கு கிடைத்த முக்கியத்துவம், அதிமுகவில் அதிருப்தியில் இருந்த மேலும் பல மாஜி அமைச்சர்களைத் த.வெ.க. பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதிமுகவில் இருந்தபோது போதிய அங்கீகாரமோ, அல்லது தலைமை மீது நம்பிக்கையோ இல்லாத சில முன்னாள் அமைச்சர்கள், இப்போது செங்கோட்டையன் மூலமாக விஜய்யின் கட்சிக்குத் தூது அனுப்பியிருப்பதாக, அதிமுக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

 

செங்கோட்டையன் இதை வெளிப்படையாகவும் உறுதிப்படுத்தியிருக்கிறார். “இந்த மாதத்திற்குள் த.வெ.க. கூட்டணி மேலும் வலுப்பெறும். அதிமுக முன்னாள் அமைச்சர்களில் யார் யார் சேருகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்” என்று அவர் விடுத்திருக்கும் சவால், அதிமுக தலைமைக்கு விழுந்திருக்கும் சம்மட்டி அடியாகப் பார்க்கப்படுகிறது.

 

த.வெ.க.வின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக, வரும் டிசம்பர் 16-ம் தேதி ஈரோட்டில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார். இந்த நிகழ்வின்போது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் த.வெ.க.வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மெகா இணைப்பிற்கான முழு ஏற்பாட்டையும் செங்கோட்டையனே முன்னின்று கவனித்து வருவதாகச் சொல்கிறார்கள்.

 

இவர்கள் மட்டுமல்லாமல், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜவர்மன், தமிழரசன், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் அசோகன், திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் த.வெ.க.வில் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம்.

 

விஜய் கட்சிக்குள் நுழையும் இந்த முக்கியஸ்தர்கள் சிலர், தாங்கள் இணைவதற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, மாநில அளவிலான பதவி அல்லது மாவட்டச் செயலாளர் போன்ற முக்கியப் பதவிகள், அத்துடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் ஆகியவற்றை விஜய் தரப்பு உறுதிப்படுத்தினால், இணைப்புக்கான தேதி விரைவில் வெளியாகும் என்று த.வெ.க. வட்டாரங்கள் நம்பிக்கையுடன் பேசுகின்றன.

 

ஒருபுறம், இப்படிப் பெரிய விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்க, மறுபுறம் அதிமுகவின் மூத்த தலைவர்கள் மத்தியில் கடும் கலக்கமும் அதிருப்தியும் தலைதூக்கியுள்ளது. இந்தத் தொடர் வெளியேற்றங்களுக்கு முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவது, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமே என்கிறார்கள்.

 

அதிமுகவின் முக்கிய அனுபவஸ்தர்கள் பலரும் கட்சியிலிருந்து வெளியேறுவதைக் கண்டும், அதைப் பற்றி அவர் கவலைப்படாமல் இருப்பதும், முக்கியப் பிரச்சினைகளைப் பேசத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பதும் பல மூத்த தலைவர்களைக் கோபப்படுத்தியுள்ளது.

 

இதில் முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் தங்கமணி ஆகியோர் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியைக் காட்டத் தொடங்கியுள்ளனர். சி.வி.சண்முகம், செங்கோட்டையனைப் போலவே, “கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் சேர்த்துக்கொண்டால் மட்டுமே வரவிருக்கும் தேர்தல்களில் ஜெயிக்க முடியும்” என்று எடப்பாடி பழனிசாமியிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளார். ஆனால், அந்தப் பிரச்சினையைப் பொதுச்செயலாளர் கண்டுகொள்ளவே இல்லை என்று அவர் கடும் விரக்தியில் இருக்கிறாராம்.

 

கொங்கு மண்டல முக்கியப் புள்ளியான தங்கமணியும் எடப்பாடியின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பட்டும் படாமலும் கலந்துகொள்வதைத் தவிர்த்து வருவதாகத் தகவல். தங்கமணி குறித்து ஊடகங்களில் பல வதந்திகள் பரவிக் கொண்டிருக்கின்ற நிலையில், அவரது அமைதி, “அவர் அடுத்தது என்ன செய்யப் போகிறாரோ?” என்ற கேள்வியை எழுப்புகிறது.

 

மொத்தத்தில், ஒருபுறம் அதிமுகவின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திக் கொண்டிருக்க, மறுபுறம் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால், இருக்கும் மூத்த நிர்வாகிகளுமே தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் அபாயம் உருவாகியுள்ளது. அதிமுகவின் கோட்டை மெல்ல மெல்லக் காலியாகி வருவது, தமிழக அரசியல் களத்தின் கவனத்தை த.வெ.க. பக்கம் திருப்பியுள்ளது.

 

எடப்பாடி பழனிசாமி இனியாவது திருந்துவாரா? வரும் தேர்தலுக்கு வலிமையான அதிமுகவை களமிறக்குவாரா? அதிமுக இழந்த வலிமையை பெறுமா என்று அதிமுகவினர் ஆதங்கத்தோடு எதிர்பார்ப்பில் உள்ளனர்.