--- --:--:-- --

ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் நடந்த திடீர் சோதனை.. அமலாக்கத் துறையின் அடுத்த குறி யாருக்கு?

6

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஐ.பெரியசாமி வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தி இருப்பது, திமுக தலைமையை அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டசபைத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் சோதனை நடந்திருப்பதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது; அமலாக்கத் துறை சோதனை வளையத்தில் மேலும் சில அமைச்சர்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

திமுக துணை பொதுச் செயலாளர், மூத்த அமைச்சராக உள்ள ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள், சோதனை நடத்தி இருப்பது தமிழகத்தை பரபரப்பாக்கி இருக்கிறது.  சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதி ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
முதலில் இந்த  இரண்டு இடங்களிலும் சோதனைக்கு அதிகாரிகள் சென்றபோது சாவியை தர, அமைச்சரின் உதவியாளர்கள் மறுத்துவிட்டனர். இதனால், சுமார் 4 மணி நேரம் அமலாக்கத் துறை அதிகாரிகள் காத்திருந்தனர். பின்னர், மாற்று சாவி கொண்டு வரப்பட்டு, பெரியசாமியின் அறைகள் திறக்கப்பட்டு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதேபோல், திண்டுக்கல் துரைராஜ் நகரில் உள்ள ஐ. பெரியசாமி வீட்டிலும், திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள பழனி எம்.எல்.ஏ.வும், திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், ஐ.பெரியசாமியின் மகனுமான ஐ.பி. செந்தில்குமார் வீடுகளிலும் அதிகாரிகள் சல்லடையாக சோதனை செய்தனர். திண்டுக்கல், ஆர்.எம். காலனி சிவாஜி நகரில் வசிக்கும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திராணி வீடும் அமலாக்கத் துறை அதிகாரிகளின்  சோதனையில் இருந்து தப்பவில்லை.
இதனிடையே, திண்டுக்கல்லில் சோதனை நடைபெற்ற தகவல் தெரிய வந்ததும் திமுகவினர் கொந்தளித்து போனார்கள். உடனடியாக ஐ.பெரியசாமியின் வீட்டுமுன் திமுகவினர் அமர்ந்து, அமலாக்கத் துறையை எதிர்த்து போராட்டம் செய்தனர்.
ஒருவழியாக, சுமார் 11 மணி நேரம் வரை நடந்த அமலாக்கத் துறை இரவில் நிறைவடைந்தது. சோதனையின்  முடிவில், அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரு சூட்கேஸ் நிறைய ஆவணங்கள் மற்றும் சில கோப்புகளை டிஜிட்டல் ஆவணப்படுத்தியும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை திமுகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், ஐ.பெரியசாமியை இப்போது குறி வைத்தது ஏன் என்று குற்றம் குற்றமே தரப்ப்பில் விசாரித்தோம். இதில் நமக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
கடந்த 2006-11 காலகட்டத்தில் திமுக ஆட்சியில் வீட்டு வசதி இலாகா அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, வீடுகளுக்கான நில ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.  முறைகேடாக நிலம் ஒதுக்கியதன் மூலம் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் சொத்து சேர்த்ததாக ஐ.பெரியசாமி, மனைவி, மகன்கள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
ஆனால், ஐ.பெரியசாமி மீதான  இந்த வழக்கை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனால், கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததோடு, இந்த வழக்கை மீண்டும் 6 மாதங்களுக்குள் விசாரிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த சூழலில்தான் ஐ.பெரியசாமியை சோதனை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது அமலாக்கத் துறை.
ஆனால், இந்த சோதனைக்கு அரசியல் காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் தான் இருக்கிறது. அரசியல் களத்தில் அசைக்க முடியாத அரசு பலத்துடன் திமுக உள்ளது. திராவிட மாடல் அரசு என்று ஸ்டாலின் அறிவித்து வரும் புதுப்புது திட்டங்கள், மக்கள் மத்தியில் திமுகவுக்கு  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரம், எதிர் முகாமில் உள்ள அதிமுக- பாஜக கூட்டணி பலவீனமாக உள்ளது. விஜயின் வரவால் அதிமுக வெற்றி பாதிக்கப்படுமோ என்ற சந்தேகம் உள்ளது. அசுர பலத்துடன் உள்ள திமுகவை அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால்தால், அதன் வளர்ச்சியை தடுக்க முடியும் என்று, தற்போது அமலாக்கத் துறையை பாஜக பயன்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் பின்னணியில் அண்மையில் நடந்த நெல்லை விருந்து நிகழ்ச்சியும் காரணம்  என்று சொல்லப்படுகிறது. நெல்லையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில், அண்மையில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து தரப்பட்டது. அதற்கு முன்பாக இருவரும் தனிப்பட்ட முறையில் ரகசியமாக மேல் மாடியில்  ஆலோசனை நடத்தினர். சுமார் ஒருமணி நேரம் நீடித்த ஆலோசனையில், தென்மாவட்டங்களில் அதிமுக- பாஜக அணியின் பலம் மற்றும்  பலவீனங்கள் குறித்து பேசப்பட்டன.
தென் மாவட்டங்களில் திமுகவின் செல்வாக்கை தடுக்க, அங்கு தூண்களாக உள்ள திமுக அமைச்சர்களை பலவீனமாக்க வேண்டும் என்று இரு தலைவர்களும் பேசிக் கொண்டார்களாம். அதை தொடர்ந்தே தற்போது ஐ. பெரியசாமி குறிவைக்கப்பட்டுள்ளார் என்று நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  எனவே, விரைவில் தென் மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெறலாம் என்று தெரிகிறது. அமலாக்கத் துறையின் அடுத்து மூவ் என்னவாக  இருக்கும்?  யாரை குறிவைத்து கட்டம் கட்டப் போகிறார்கள் என்பதே அரசியல் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon