அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் எஸ்.எம்.சி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியின் முதலாவது எஸ்.எம்.சி கூட்டத்தில் மாதந்தோறும் கூட்டம் நடத்துவது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப்பள்ளியின் முதலாவது பள்ளி மேலாண்மை குழு (எஸ்.எம்.சி) கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு எஸ்.எம்.சி தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். எஸ் எம் சி ஒருங்கிணைப்பாளரும் பள்ளியின் தலைமை ஆசிரியருமான ராமகிருஷ்ணன் வரவேற்றார்.
பின்னர் எஸ்.எம்.சி யின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் 20 எஸ்.எம்.சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து எஸ்.எம்.சி உறுப்பினர்கள் பள்ளி வளர்ச்சி குறித்து விவாதித்தனர்.
இதனை தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு : பள்ளி மாணவர்கள் நலன் கருதி மாதந்தோறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடத்துவது. மேலும், தேவைக்கேற்ப அதே மாதத்தில் மற்ற நாட்களிலும் கூட்டம் நடத்துவது, இத்துடன் அடுத்த எஸ்.எம்.சி கூட்டம் வருகிற நவம்பர் 29 ஆம் தேதி மதியம் 3:00 மணிக்கு நடத்துவது.
தற்போது பள்ளியில் 810 மாணவர்கள் படித்து வருகிறார்கள். திருமுருகன்பூண்டி நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்கள் தற்போது நியமனம் செய்யப்பட உள்ள நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்ய நகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்வது.
பள்ளியில் 456 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான அளவில் கழிவறைகள் இல்லை. எனவே மிக விரைவில் 2 இன்சினரேட்டர் என்னும் எரியூட்டி வசதியுடன் 15 யூனிட் கழிப்பறைகள் நகராட்சி நிர்வாகம் கட்டித்தர வேண்டும். அதேபோல் பள்ளியின் சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்து விட்டதாலும், உயரம் குறைவாக இருப்பதாலும் இந்த சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு புதிய சுற்றுச்சுவரை நகராட்சி நிர்வாகம் கட்டித் தர வேண்டும்.
அதேபோல் வகுப்பறைகளின் உள் மற்றும் வெளிப்புற சுவர்களுக்கு வர்ணம் பூசி தர வேண்டும். பள்ளி மாணவர்கள் அனைவரும் வகுப்பறைகளில் வசதியாக அமர்ந்து கல்வி பயில டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் அவசியம். தற்போது 7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் உள்ளன. 1 முதல் 6-ம் வகுப்பு வரை மாணவர்கள் தரையில் அமர்ந்து கல்வி பயின்று வருகிறார்கள்.
எனவே அனைத்து மாணவர்களுக்கும் உட்கார்ந்து கல்வி பயில டெஸ்க் மற்றும் பெஞ்சுகள் செய்து தர வேண்டும். மாணவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நல்ல உள்ளத்துடனும் இருந்தால் மட்டுமே நன்கு கல்வி பயில முடியும் என்பதால், உடல் மற்றும் மன நலன் மேம்பட யோகா பயிற்சி அளிக்க உரிய அனுமதி பெற்று தர வேண்டும்.
மாணவர்கள் கல்வி பயிலும் பொழுது புத்தக அறிவுடன் நேரடி அனுபவம் மூலம் இன்னும் பல விஷயங்களை அறிய முடியும் என்பதால் மாணவர்களை கள ஆய்வு மற்றும் இன்ப கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று நேரடி அனுபவம் பெற பள்ளி கல்வித்துறை உள்பட உரிய துறையின் அனுமதி பெற்று அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வது. ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் எஸ்.எம்.சி ஆசிரியர் பிரதிநிதி முத்துக்குமார் நன்றி கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




