மதுரையில் மழை பாதிப்புகளை சரிசெய்ய போர்கால அடிப்படையில் பணிகள்!
மதுரையில் நேற்று காலை முதல் இரவு வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நேற்று பகல் மூன்று மணியளவில் 15 நிமிடங்களில் மட்டும் 45 மில்லி மீட்டர் மழை பொழிந்தது.
இதன்காரணமாக முல்லை நகர், சர்வேயர் காலனி, கட்டபொம்மன் நகர், செல்லூர் உள்ளிட்ட 18 இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இரவு முதல் மழை விட்ட நிலையில், செல்லூர் 50 அடி சாலையில் உள்ள கட்டபொம்மன் நகர், போஸ் வீதி, அஹிம்சாபுரம் உள்ளிட்ட தெருக்களில் தேங்கிய நீர் இன்னும் வடியாமல் உள்ளது.
ஒரு சில தெருக்களில் இடுப்பளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது. வீடுகளுக்குள் நேற்று மாலை புகுந்த தண்ணீர் வடியாமல் இருப்பதால் மக்கள் இரவு முழுவதும் தூக்கத்தை இழந்து தவித்தனர். நேற்று இரவில் இருந்ததைவிட காலையில் தண்ணீர் அளவு அதிகரித்திருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நீர் நிலைகளை முறையாக தூர்வாராததாலேயே குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மூன்று இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 128 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் போர்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதவிட்டுள்ளார். அதில், மழை பாதிப்பு குறித்து அறிந்தவுடன், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்ததாகவும், அதிகாரிகளை தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
ராட்சத மின் மோட்டார்கள் மூலம் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், 20 இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப, போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




