மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக வேட்பாளர்கள்..!
மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மொத்தம் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த இரண்டு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 9ஆம் தேதி தொடங்கி 16-ம் தேதி நிறைவடையும் எனவும், வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 16-ம் தேதியும் எனவும், வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில், தவெக, திமுக, அதிமுக, நாதக ஆகிய நான்கு முக்கிய கட்சிகளும் தாங்கள் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான திமுக, தனது வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி தாராபுரம் தனி சட்டமன்ற தொகுதியில் வழக்கறிஞர் சுகன்யா போட்டியிடவுள்ளார். இதைத்தொடர்ந்து அதிமுகவும் நாம் தமிழர் கட்சியும் வேட்பாளர்கள் தேர்வில் தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் ஏற்கெனவே அதிமுக சார்பில் களம் கண்டு வெற்றி பெற்று அண்மையில் தவெகவில் இணைந்தவர்களுக்கே மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதியில் அதிமுக சார்பில் களம் கண்டு வெற்றி பெற்றவர் சத்தியபாமா. சுமார் 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் இந்திராணியை தோற்கடித்தவர்.
அதேபோல மதுராந்தகம் (தனி) தொகுதியிலும் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் ஐக்கியமான மரகதம் குமரவேல், மீண்டும் அதே தொகுதியில் தவெக சார்பில் களம் காணவுள்ளார்.
இது தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
வருகிற 06.10.2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களாகக் கீழ்க்காண்பவர்கள் போட்டியிடுவார்கள்.
1. 35-மதுராந்தகம் (தனி) – திருமதி K.மரகதம் குமரவேல், Ex.M.L.A., கழகத் துணைப் பொதுச் செயலாளர்
2. 101 – தாராபுரம் (தனி) -திருமதி P.சத்தியபாமா. Ex.M.L.A., திருப்பூர் தென்கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்
கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் அனைவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு நம் வெற்றி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




