குற்றம் குற்றமே நடத்திய மெகா சர்வே ரிசல்ட்..நீலகிரி பாராளுமன்றத் தொகுதி..ராஜாவுக்கே கிரீடம்? இது, நீலகிரியின் ஆரூடம்!
கடும் சவால் தரும் அமைச்சர் முருகன்…
அதிமுகவால் வெற்றி கேள்விக்குறி!
மலைகளின் அரசி எனப்படும் உதகை அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் தொகுதி நீலகிரி மக்களவைத் தொகுதி. குளுகுளுவென்று இருக்க வேண்டிய நீலகிரி தொகுதி, அனல் வீசும் தேர்தல் பிரசாரத்தால் சூடேறிப் போயுள்ளது.
தொகுதியின் பின்னணி
ஆரம்ப காலத்தில் நீலகிரி பொதுத் தொகுதியாகவே இருந்து வந்தது. நீலகிரி மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்குப் பின் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. இங்கு அவிநாசி, மேட்டுப்பாளையம், குன்னூர், கூடலூர், உதகமண்டலம், பவானிசாகர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவற்றில் அவிநாசி மற்றும் கூடலூர் ஆகியன தனித் தொகுதிகளாகும்.
நீலகிரி தொகுதியில் வெளி மாவட்ட வாக்களர்களே அதிகம். காரணம், அவிநாசி திருப்பூர் மாவட்டத்திலும், மேட்டுப்பாளையம் கோவை மாவட்டத்திலும், பவானி சாகர் ஈரோடு மாவட்டத்திலும் மீதமுள்ளவை நீலகிரி மாவட்டத்திலும் என நான்கு மாவட்டங்களில் பரவிக்கிடக்கும் மக்களவைத் தொகுதி நீலகிரி.
நீலகிரி சுற்றுலாவுக்கு பேர் போன ஊர். தேயிலை, காய்கறி சாகுபடி இங்கு பிரதானம். தொகுதியில் இடம் பெற்றுள்ள மேட்டுப்பாளையம், பவானிசாகர் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. இதுதவிர, சாயப் பட்டறைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அவிநாசி தொகுதியில் நெசவுத் தொழிலும், பின்னலாடை, விவசாயம் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன.
2024இல் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 14,18,915
ஆண் வாக்காளர்கள்: 6,83,021
பெண் வாக்காளர்கள்: 7,35,797
மூன்றாம் பாலின வாக்காளர்கள்: 97
நீலகிரி… காங்கிரஸின் கோட்டை!
நீலகிரி தொகுதி ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்துள்ளது. இங்கு 7 முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். பிரபு இத்தொகுதியில் இருந்து 5 முறை பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீப காலங்களில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, நீலகிரியில் இரு முறை வென்றுள்ளார்.
குறிப்பாக, கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஆ.ராசா 5 லட்சத்து 47 ஆயிரத்து 832 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தியாகராஜன் 3,42,009 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்ட ராஜேந்திரன் 41,169 வாக்குகளையும், டிடிவி தினகரனின் அமமுக வேட்பாளர் ராமசாமி 40,419 வாக்குகளையும் பெற்றனர்.
2024இல் யார் யார் போட்டி?
நடப்பு பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஆ. ராசா மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில், முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மீண்டும் களம் காணுகிறார். இதனால், இத்தொகுதிக்கு ஸ்டார் தொகுதியாக பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியில் ஆ. ஜெயக்குமார் என்பவர் நீலகிரியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது. சிட்டிங் எம்பி என்ற முறையில் ஆ.ராசா மீது பரவலாக மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதை குற்றம் குற்றமே நேரடி கள ஆய்வில் காண முடிகிறது.
முருகனின் செல்வாக்கு அதிகரிப்பு!
தொகுதியில் பாஜகவின் கிடுகிடு வளர்ச்சியானது, அதிமுக- திமுக இரண்டுக்குமே பெரும் சவாலாக உள்ளது. இது அமைச்சர் முருகனுக்கு சாதகமாக விஷயம். அதே நேரம், திமுகவுக்கு எதிரான வாக்குகளை அதிமுக பிரிப்பதால், அது முருகனின் வெற்றியைக் கேள்விக்குறியாக்குகிறது.
பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பல மாதங்களுக்கு முன்பே சத்தமில்லாமல் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டார். கோயில் பணிகளுக்கு தாராள நிதி உதவி, பல கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுடன் கலந்துரையாடல் என முருகனின் செயல்பாடு, மக்களை கவர்ந்துள்ளது. படுகர் இன மக்கள் மத்தியில் பாஜகவுக்கு கணிசமான செல்வாக்கு இருப்பதாக அக்கட்சியினர் உற்சாகத்துடன் களமிறங்கி உள்ளனர். மலையாளிகள், கன்னட மக்கள் போன்றவர்களின் வாக்கு தாமரை பக்கம் இருக்கும் என்பது எல்.முருகனின் தேர்தல் கணக்காக உள்ளது.
சமவெளிப் பகுதிகளில் அதிமுகவுக்கு மவுசு
அதிமுகவை பொறுத்தவரை, சமவெளிப் பகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது. குறிப்பாக மேட்டுப்பாளையம், அவிநாசி தொகுதிகளில் அதிமுகவின் இரட்டை இலையை ஆதிக்கம் செலுத்துவதை, குற்றம் குற்றமே கள ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனினும், பவானிசாகரில் அதிமுகவுக்கு சமமாக திமுகவிற்கு கணிசமாக செல்வாக்கு உள்ளது.
அத்திக்கடவு- அவிநாசி திட்டம் கொண்டு வந்தது அதிமுகவுக்கு சாதகமாக உள்ள விஷயம். எனினும், தேர்தல் வெற்றிக்கு அது கைகூடும் என்கிற அளவுக்கு அது இல்லை என்பதே கள நிலவரம் சொல்கிறது. நீலகிரி மக்களவைத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றத் தொகுதிகளில் நான்கு, அதிமுக வசம் இருந்தாலும், அது வெற்றி வாய்ப்புக்கு பலம் சேர்க்கவில்லை.
தொகுதியின் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளார். ஒருவேளை வெற்றிக்காக அதிக பணம் செலவழித்தாலும் கூட, அதிமுகவை பொறுத்தவரை தனது இருப்பை இங்கு உறுதி செய்து கொண்டு 3ஆம் இடம் பிடிப்பதே பெரிய ஆறுதலான விஷயமாக இருக்கும்.
என்றுமே ராஜாதான்!
சிட்டிங் எம்பி ஆக இருந்து என்ன செய்தார் என்பது போன்ற கேள்விகள் திமுகவுக்கு பின்னடைவாக இருந்தாலும், மாநிலத்தை ஆளும் திமுக வேட்பாளர் என்பதால், ராசாவை தேர்ந்தெடுக்க விரும்புவதாக பலரும் நம்மிடம் தெரிவித்தனர். தொகுதியில் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களின் வாக்கு திமுக பக்கம் இருப்பது, அக்கட்சிக்கு பிளஸ் பாயிண்ட்.
அதே நேரம், கூடலூர் தொகுதியில் பாஜக, திமுக சம பலத்துடன் மோதுகின்றன. உதகை மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளிலும் திமுக ஆதிக்கவே செலுத்துகிறது. தொகுதிக்கு செய்த விஷயங்களை பட்டியலிட்டு ஆ. ராசா வாக்கு சேகரிப்பதோடு, பாஜக மீதான தாக்குதல் மக்கள் மத்தியில் எடுகிறது. குறிப்பாக, எல். முருகன் ராஜ்யசபா எம்பி ஆகிவிட்டார். நீலகிரியில் அவரை மீண்டும் தேர்ந்தெடுப்பது வேஸ்ட் என்ற திமுகவினரின் முழக்கம் தொகுதியில் எடுபடுகிறது.
திமுகவுக்கு எதிரான வாக்குகளை அதிமுக பிரிப்பதாலும், நீலகிரியில் உள்ள கணிசமான திமுக வாக்குகளாலும் மூன்றாவது முறையாக ஆ. ராசாவே கிரீடம் சூடுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உலகையே சுற்றி வந்த போதும் ஞானப்பழத்தை முருகன் கோட்டை விட்டது போல், தொகுதியை வலம் வந்தாலும் வெற்றிக்கனி கைகூடுவது கடினம் தான்.
அதேநேரம், எல். முருகன் கடுமையான போட்டிகளை தருவதாலும், கணிசமாக செல்வாக்கு இருப்பதாலும் ஆ. ராசாவின் வெற்றி அதிக வாக்கு வித்தியாசத்தில் இருக்காது என்பது நமது குற்றம் குற்றமே நேரடி கருத்துக் கணிப்பில் தெரியவருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




