குற்றம் குற்றமே நடத்திய மெகா சர்வே ரிசல்ட்..ஈரோடு பாராளுமன்றத் தொகுதி..மஞ்சள் நகரில் மகுடம் சூடுவது யார்?
ஆற்றல் அசோக்குமாரால் பலம் பெறும் அதிமுக! உள்ளடி வேலைகளால் உற்சாகம் இழந்த திமுக…
தமிழகத்தின் 39 தொகுதிகளில் 17ஆவது தொகுதியாகத் திகழ்கிறது ஈரோடு. கொங்கு மண்டலத்தில் உள்ள முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக ஈரோடு விளங்குகிறது கடந்த 2008-ஆம் ஆண்டில் நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது, திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு, அதிலிருந்து சில தொகுதிகளை எடுத்தும், புதிய தொகுதிகளைச் சேர்த்தும் ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தொழில் நகரான ஈரோடு, ஜவுளி மற்றும் விசைத்தறி தொழிலோடு சாய, சலவைப் பட்டறை தொழில் மேற்கொள்வோரும் அதிகம் உள்ளனர். காவிரி, பவானி ஆறு பாயும் ஈரோடு மாவட்டத்தில் நெல், மஞ்சள், நிலக்கடலை, கரும்பு, வாழை, மரவள்ளி போன்ற பயிர்கள் பிரதான சாகுபடியாக உள்ளன.
தொகுதியில் கொங்கு வேளாள கவுண்டர்கள், முதலியார், வன்னியர், நாடார், ஆதிதிராவிடர்கள் அதிகளவில் உள்ளனர். சாயக்கழிவு பிரச்சனை, காவிரி நீர் மாசு, கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பிரச்சனை என்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுடன் சாலைவசதி, அடிப்படை கட்டமைப்பு வசதி போன்ற தேவைகளும் ஈரோட்டில் பிரதானமாக உள்ளன.
சட்டமன்றத் தொகுதிகள் எவை?
ஈரோடு பாராளுமன்றத் தொகுதியில் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம், குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
திருச்செங்கோடு தொகுதியாக இருந்தவரை அதிகபட்சமாக திமுக மற்றும் அதிமுக தலா 5 முறை வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 2 முறை மற்றும் மதிமுகவும் சுயேச்சையும் தலா ஒருமுறை இங்கு வெற்றி பெற்றுள்ளன.
ஈரோடு தொகுதியின் தற்போதைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை: 15,28,241
ஆண் வாக்காளர்கள்: 7,40,298
பெண் வாக்காளர்கள்: 7,87,762
மூன்றாம் பாலின வாக்காளர்கள்:181
2019இல் ஈரோட்டில் பெற்ற வாக்குகள் விவரம்:
கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் மதிமுக போட்டியிட்டது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு கணேசமூர்த்தி 5,63,591 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுகவின் ஜி. மணிமாறன், 3,52,973 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
மக்கள் நீதிமய்யம் கட்சியின் சரவணகுமார் 47,719 வாக்குகள், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 39,010 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினர்.
2024 தேர்தலில் யார் யார் போட்டி?
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈரோட்டில் திமுக , பாஜக கூட்டணியில் தாமக மற்றும் அதிமுக, நாம் தமிழர் கட்சி என்று 4 முனைப் போட்டி நடைபெறுகிறது. பிரகாஷ் (திமுக), ஆற்றல் அசோக் குமார் (அதிமுக), விஜய்குமார் (த.மா.கா.), கார்மேகம் ( நாம் தமிழர் கட்சி) ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

வேட்பாளர்களின் பின்னணி
பொதுவாக ஈரோடு அதிமுகவின் கோட்டையாகவே காலங்காலமாக இருந்து வந்திருக்கிறது. எனினும், அதிமுக பிளவுபட்டது போன்ற காரணங்களால் திமுகவின் கை ஓங்கி இருந்துள்ளது. கடந்த முறை மதிமுகவின் கணேசமூர்த்தி, (சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டவர்) இங்கு வெற்றி கண்டார். தற்போது களமிறங்கியுள்ள பிரகாஷ் (48), திமுகவின் மேற்கு மண்டலப் பொறுப்பாளர். இவரது சொந்த ஊர் மொடக்குறிச்சி அடுத்த காணியம்பாளையம் ஆகும். மாவட்ட அமைச்சர் முத்துசாமியின் ஆதரவு இல்லாத நிலையில், நேரடியாக உதய நிதியின் ஆசியோடு வேட்பாளர் ஆகியுள்ளார்.
இவரை எதிர்த்து களமிறங்கியுள்ள பாஜகவில் இருந்து அண்மையில் விலகி, அதிமுகவில் இணைந்த ஆற்றல் அசோக் குமார். இவர், மொடக்குறிச்சி பாஜக எம்.எல்.ஏ., சரஸ்வதியின் மருமகன் ஆவார். தொகுதியில் நல்ல அறிமுகம் உள்ளவர். கொடுமுடியை அடுத்த புதுப்பாளையம் தான் இவரது சொந்த ஊர். அமெரிக்காவில் படித்தவர், தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் ஆவார். ஆற்றல் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதால், ஆற்றல் அசோக் குமார் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். 10 ரூபாய்க்கு உணவு, மருத்துவ முகாம்கள் என்று மக்களிடம் நல்ல பரிச்சையம் உள்ளவர்.
ஈரோட்டில் போட்டியிடுவது என்ற முடிவோடு பல மாதங்களுக்கு முன்பே பணிகளை தொடங்கிய ஆற்றல் அசோக் குமார், பாஜகவில் வாய்ப்பு கிடைக்காமல் போனால் என்ன செய்வது என்பதற்காகவே, ஈரோடு தொகுதியில் வாய்ப்பு தர வேண்டுமென்ற நிபந்தனையோடு அதிமுகவில் இணைந்தார்; தொகுதியில் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
பாஜக சார்பில், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமார் களமிறப்பட்டுள்ளார். மருத்துவர் கார்மேகம், நாம் தமிழர் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
கள நிலவரம் யாருக்கு சாதகம்?
மஞ்சள் நகரில் மகுடம் சூடுவது யார் என்பதை அறிய குற்றம் குற்றமே தரப்பில் சட்டமன்றத்தொகுதி வாரியாக சிறப்பு நிருபர் குழு களமிறங்கியது. திமுக கூட்டணியில் எம்.பி.ஆக இருந்த காலஞ்சென்ற கணேசமூர்த்தி, எம்.பி. ஆனதோடு சரி, பின்னர் தொகுதி பக்கம் வரவே இல்லை என்று மக்கள் நம்மிடம் குமுறுகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளில் பெரியதாக எதையும் கணேசமூர்த்தி செய்துதரவில்லை; 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பிரச்சனைகள் அப்படியே நீடிப்பதாக மக்கள் நம்மிடம் தெரிவித்தனர்.
தற்போதைய கள நிலவரப்படி அதிமுக, திமுக இடையே தான் பிரதான போட்டியே உள்ளது; பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் தமாக வேட்பாளர் விஜயகுமார் பின்தங்கியே உள்ளார். பாஜகவுக்கும், அமமுகவுக்கும் சொற்ப அளவிலேயே தொகுதியில் வாக்கு வங்கிகள் உள்ளதால், தமாகாவுக்கு 3ஆவது இடம் என்பதே தற்போதைய கள நிலவரமாகும்.
அபரிமித ஆற்றல்… ஆட்டம் காணும் திமுக!
வெற்றி வாய்ப்பை பொறுத்தவரை அதிமுக – திமுக இடையே உள்ள போட்டியில் அதிமுகவின் கரமே ஓங்கி உள்ளது. ஆற்றல் அசோக்குமாரின் அபரிமிதமான பலம், திமுகவில் உள்ளடி வேலைகள் போன்றவை பிரகாஷுக்கு பாதகமான அம்சங்கள். மக்களிடம் அவருக்கு அறிமுகம் பெரிய அளவில் இல்லை என்பதும் பெரிய சறுக்கல்.
மாறாக, தொகுதியில் நன்கு அறிமுகமான ஆற்றல் அசோக் குமார், சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளை செய்து, தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். பல நல்ல காரியங்களை செய்துள்ளதால, அவர் எம்.பி. ஆக இருந்தால் நன்றாக இன்னும் செய்வார் என்ற நம்பிக்கை பலரிடமும் காணப்படுகிறது. இயல்பாகவே கிராமப்புறங்களில் உள்ள இரட்டை இலைக்கான மவுசு போன்றவை, அதிமுகவிற்கு சாதகமாக உள்ளன.
மொத்தத்தில் பார்த்தால், ஈரோடு தொகுதியில் நூலிழையில் திமுக வெற்றி வாய்ப்பை நழுவவிடும்; தனக்குள்ள ஆற்றலால் இரட்டை இலையை துளிர்க்கச் செய்வார் அசோக் குமார் என்பதே கள நிலவரமாக உள்ளது. பரப்புரை, பணப்பட்டுவாடா போன்ற கடைசி நேர தகிடுதத்தங்கள் வேண்டுமானால், ஒருவேளை திமுகவை கொண்டு வரலாமே தவிர, மக்கள் மனதில் இரட்டை இலையே துளிர்க்கிறது. ஆற்றல் அசோக் குமார் மகுடம் சூடி மக்களவைக்கு செல்வார் என்பதே நமது கணிப்பில் தெரிய வந்துள்ளது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





