பூண்டி பேரூராட்சியில் ஆக்கிரமிப்பு செய்து இருந்த ரூ.6 கோடி மதிப்புள்ள 75 சென்ட் நிலம் மீட்பு..!
பூண்டி பேரூராட்சி, திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்ய இருந்த ரூ.6 கோடி மதிப்புள்ள 75 சென்ட் நிலம் மீட்பு அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு..!
திருப்பூர், திருமுருகன்பூண்டி பேரூராட்சி 7வது வார்டில் காமாட்சியம்மன் நெசவாளர் காலனி உள்ளது. இங்கு 300 க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பார்க் மற்றும் சமுதாய கூட்டம் கட்ட சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பு ரிசர்வ் சைட்டாக விடப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் வெள்ள நீரானது பூண்டி ஆற்றுக்கு செல்லும் வகையில் திருப்பூர் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட இந்த ரிசர்வ் சைட்டுக்கு ஒட்டி சுமார் 1 ஏக்கர் பரப்பில் நீர்நிலை படுகையும் உள்ளது.
இந்தநிலையில் இந்த நீர்நிலையை ஒட்டி திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவர் இந்த நீர்நிலை பகுதியை முற்றிலும் ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் கட்ட குழி வெட்டினார். உடனே அப்பகுதியை சேர்ந்த மக்கள் அவரிடம் இந்த பகுதி நீர்நிலை பகுதி என்றும், சர்வேயரை வைத்து அளந்து உங்கள் பகுதியில் கட்டுங்கள் என்றும் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் எதையும் கண்டு கொள்ளாமல் தனது வேலையை செய்ய ஆரம்பித்தார். இந்த நிலையில் குழியில் கருங்கற்களை போட்டு சுவர் கட்ட அஸ்திவாரம் போடஆரம்பித்தார்.
இதைத்தொடர்ந்து காமாட்சியம்மன் நெசவாளர் காலனி ஊர் பொதுமக்கள் ஓன்றுகூடி இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கையெழுத்து போட்டு திருப்பூர் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் திருப்பூர் தாசில்தார் ஜெகநாதன் மேற்பார்வையில் துணை தாசில்தார் சரவணன் மற்றும் வருவாய் ஆய்வாளர் சக்திவேல்,செட்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் பாரதி, சர்வேயர் கார்த்தி மற்றும் கிராம உதவியாளர் முருகன் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று நிலத்தை அளந்து ஆய்வு செய்தனர்.
அப்போது காமாட்சியம்மன் நெசவாளர் காலனி பொதுமக்கள் கட்சி பாகுபாடின்றி ஒன்று சேர்ந்தனர். அப்போது அருகில் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பழனிசாமி இந்த நீர்நிலை இடத்தை ஆக்கிரமித்து காம்பவுண்ட் சுவர் கட்டும் பணியை செய்து வந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்த கட்டிடம் கட்டும் பணியை நிறுத்த உத்தரவிட்டனர். இதனால் கட்டிடம் கட்டும்பணி நிறுத்தப்பட்டது. உடனே அரசுக்கு தேவைப்படும் குத்துக்கல் என்னும் அளவுக்கல் நடப்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்பு செய்த பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமில்லாமல் மேற்கொண்டு நிலம் ஆக்கிரமிப்பு செய்தால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது.

இதன்மூலம் அங்கு ஆக்கிரமிப்பு செய்ய இருந்த சுமார் 6 கோடி மதிப்புள்ள சுமார் 75 சென்ட் நிலம் மீட்கப்பட்டது. இதனை காமாட்சியம்மன் நெசவாளர் காலனி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்த ஒரே நாளில் உடனே தக்க சமயத்தில் வந்து அதிரடி நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டதை வெகுவாக பாராட்டினார். திடீரென அதிகாரிகள் அளவீடு செய்ய வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





