CM விஜய் விண்ணப்பித்த Diplomatic Passport..!
முதல் முறையாக அரசு முறைப் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் அவர் Diplomatic Passport-க்கு விண்ணப்பித்துள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், எம்.பி.,க்கள் போன்ற உயர்மட்ட அரசுப் பதவிகளில் இருப்பவர்களின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக Diplomatic Passport பயன்படுத்தப்படுகிறது.
மாநில முதலமைச்சர்கள் அரசுமுறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும்போது Diplomatic Passport பெறுவதற்கான தகுதி கொண்டவர்கள். இந்த நடைமுறை புதிதானது அல்ல. இந்தியாவில் பல ஆண்டுகளாக மாநில முதலமைச்சர்கள் அரசுப் பணிகளுக்கான வெளிநாட்டுப் பயணங்களின்போது Diplomatic Passport பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்களுக்கான சாதாரண பாஸ்போர்ட் அடர்நீல நிற அட்டையைக் கொண்டிருக்கும் நிலையில், Diplomatic Passport மெரூன் நிற அட்டையைக் கொண்டிருக்கும். இதில் Passport Type என்ற இடத்தில் Diplomatic என்பதை குறிக்கும் வகையில் ‘D’ என குறிப்பிடப்பட்டிருக்கும். பாஸ்போர்ட் சேவை விதிகளின்படி, விண்ணப்பதாரர் தேவையான அசல் ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.
இதற்காகவே முதலமைச்சர் விஜய், சென்னை அண்ணா சாலையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்றார். Diplomatic Passport-க்கு சாதாரண பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தைப் போல தனிநபரின் ஆவணங்கள் மட்டும் போதாது. வெளியுறவுத்துறை விதிகளின்படி, அதிகாரப்பூர்வ அடையாள அட்டை, சம்பந்தப்பட்ட தலைமை அலுவலகம் வழங்கும் சான்றிதழ், பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக விண்ணப்பத்தை பரிசீலனை செய்து 3 முதல் 5 வேலை நாட்களில் வழங்கப்படும்.
வரும் 10ஆம் தேதி முதலமைச்சர் விஜய் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் செல்ல உள்ள நிலையில் அவருக்கு விரைவில் டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான பாஸ்போர்ட் பொதுவாக 10 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். ஆனால் Diplomatic மற்றும் Official பாஸ்போர்ட் பொதுவாக 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவாக செல்லுபடியாகும்.
பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் பதவி மற்றும் அவர் மேற்கொள்ளும் அதிகாரப்பூர்வப் பயணத்தின் தன்மையைப் பொறுத்து பாஸ்போர்ட்டின் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. அரசு முறை வெளிநாட்டு பயணங்களுக்காக தகுதியின் அடிப்படையில் முதலமைச்சர்களுக்கு டிப்ளமோக் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் மேற்கொள்ளவுள்ள முதல் முக்கிய வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் பயணம் அமையவுள்ளது.
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டு அவர் பிரிட்டனில் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பயணத்திற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாகவே தற்போது Diplomatic Passport தொடர்பான நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன
📱 Share on WhatsApp 𝕏 Share on X




