--- --:--:-- --

சம்பா சாகுபடியைக் காப்பாற்ற தமிழக அரசுக்குக் காவிரி விவசாயிகள் கோரிக்கை..!

10

மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் முக்கொம்பு வந்தடையும் போது, திருச்சி மாவட்ட விவசாயிகள் ஆரவாரத்துடன் நெல்மணிகளைத் தூவி வரவேற்று கல்லணைக்கு வழியனுப்புவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு குறைந்த அளவிலான தண்ணீர் காலம் கடந்து வந்துள்ளதால், முக்கொம்பில் விவசாயிகளின் வரவேற்பு உற்சாகமின்றி சோகத்துடன் காணப்பட்டது.

 

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் மற்றும் த.மா.கா விவசாயிகள் அணி மண்டலப் பொறுப்பாளர் வயலூர் ராஜேந்திரன் உட்பட 5 பேர் மட்டுமே பெயரளவில் கலந்துகொண்டு, வழக்கமாகத் தூவும் நெல்மணிகளைத் தூவாமல் வெறுமனே மலர்களை மட்டும் தூவி காவிரி நீரை வரவேற்றனர்.

 

 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் மற்றும் த.மா.கா விவசாயிகள் அணி மண்டலப் பொறுப்பாளர் ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது; ஒவ்வொரு ஆண்டும் காவிரி பாசனப் பகுதிகளுக்கு வழக்கமாக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கர்நாடக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை உரிய காலத்தில் பெய்யாததால், மேட்டூர் அணைக்கு வரக்கூடிய நீர் முறையாக வந்து சேரவில்லை. இதனால் ஜூன் 12 அன்று தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

 

 

காவிரி நீரை நம்பி குறுவை சாகுபடியை முழுமையாக செய்ய முடியவில்லை; நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்த பகுதிகளிலும் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் கர்நாடகாவில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் திறக்கப்பட்டதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது.

 

 

இதனைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 1-ம் தேதி சம்பா சாகுபடிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. எனினும், தண்ணீர் திறப்பின் போது, அணையில் இருப்பில் உள்ள நீரைக் கொண்டு 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படும் என நீர்ப்பாசனத் துறை அமைச்சர் அறிவித்தது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தர வேண்டிய 177.25 டி.எம்.சி தண்ணீரில், ஜூன் மாதத்திற்குரிய 9 டி.எம்.சி, ஜூலைக்குரிய 31 டி.எம்.சி மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்குரிய 46 டி.எம்.சி என மொத்தம் 86 டி.எம்.சி தண்ணீரில் இதுவரை 30 டி.எம்.சி மட்டுமே நம்மால் பெற முடிந்துள்ளது. கர்நாடக அணைகள் நிரம்பிய நிலையிலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

 

 

மறுபுறம், எல் நினோ (El Nino) வானிலை நிகழ்வின் தாக்கத்தால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பெய்ய வேண்டிய வடகிழக்குப் பருவமழையும் சரியாகப் பெய்யுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, தற்போது திறந்துவிடப்பட்டுள்ள இந்த குறைந்த அளவு நீரைக் கொண்டு சம்பா சாகுபடியை மேற்கொள்வது முற்றிலும் சாத்தியமில்லாத நிலையாக உள்ளது.

 

 

தமிழக அரசு உடனடியாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, தமிழகத்திற்கு முறைப்படி கிடைக்க வேண்டிய உரிமையான தண்ணீரைப் பெற்றுத் தர தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தற்போது திறந்துவிடப்படும் விநாடிக்கு 7,000 கன அடி என்ற அளவை 16,000 கன அடியாக உடனடியாக உயர்த்த வேண்டும். இதன் மூலம் மேட்டூர் அணைக்குக் கீழ் உள்ள காவிரி கடைமடை வரையிலான அனைத்துப் பாசனக் கிளைக் கால்வாய்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon