--- --:--:-- --

1,000 ஆண்டுகள் பெருமை வாய்ந்த திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய்

3

யிரம் ஆண்டுகள் வரலாற்று பெருமை கொண்ட திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய், இன்று கழிவுநீரால் மெல்ல மெல்ல சீரழிந்து வருகிறது. இந்த கால்வாய் அழிவின் பாதையில் இருந்து மீட்கப்படுமா? இதற்கான விடிவு காலம் எப்போது பிறக்கும்? என்பதே திருச்சி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

திருச்சிக்கு அழகு மலைக்கோட்டை மட்டுமல்ல, நகருக்குள் வலம் வந்து வளம் சேர்க்கும் உய்யக்கொண்டான் கால்வாயும் ஒன்று. இந்தக் கால்வாய்க்கு நீண்ட வரலாறும் பெருமையும் உண்டு. விவசாயிகளுக்கான அருள் கொடையாகத் திகழ்ந்த இந்தக் கால்வாய் சோழர் காலத்தில், ராஜராஜ சோழனால் அக்காலத் தொழில்நுட்பத்தின் உதவியோடு வெட்டப்பட்டதாகும்.
மன்னனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராஜராஜ சோழனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான ‘உய்யக்கொண்டான்’ எனும் பெயரையே இக்கால்வாய்க்கு சூட்டப்பட்டுள்ளது.

 

 

பெட்டவாய்த்தலையில் தொடங்கி, திருச்சி மாநகரம் வழியாக சென்று, வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேராண்டி ஏரியுடன் இணைகிறது இந்தக் கால்வாய்.
சுமார் 70 கிலோமீட்டர் நீளமும், 120 கிளை வாய்க்கால்களும் கொண்ட உய்யக்கொண்டான் கால்வாய் மூலம், 32 ஆயிரத்து 742 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பலநூறு ஆண்டுகளாக உயிர்ப்புடன் காவிரிக்கு அடுத்தப்படியாக, முக்கிய நீர் ஆதாரமாக இருந்து மக்களுக்கு பலன் கொடுத்து வந்த இந்தக் கால்வாய் காலப்போக்கில் நாகரிக வளர்ச்சியில் குப்பைகளும், கழிவுநீரும் கலந்து சாக்கடையாகவே மாறிவிட்டதுதான் பரிதாப நிலை.

 

 

முப்போகம் விளையக் காரணமான இக்கால்வாயை இப்போது மூக்கை மூடி கடக்கிறார்கள் மக்கள். வாய்க்காலின் கரைகளை அழகுபடுத்தவும், பூங்காக்கள் அமைக்கவும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டாலும், கால்வாயில் கழிவுநீர் கலப்பது இன்றளவும் தொடர்வதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எந்தெந்த இடங்களில் இருந்து கால்வாயில் கழிவுநீர் கலக்கிறது என்பதை அதிகாரிகள் கண்டறிந்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

 

திருச்சி மாநகர மக்களுக்கும் விவசாய தேவைக்கும் முக்கிய நீராதாரமாக விளங்கும் உய்யக்கொண்டான் கால்வாய். மீண்டும் உயிர் கொண்டானாக விளங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon