மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம்..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை மறுநாள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 8ஆம் தேதி காலை 10.30 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என கூறப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி மத்திய பிரதேசத்தில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா, அசாமில் இருந்து சர்பானந்தா, மகாராஷ்டிராவில் இருந்து நாராயணன் ஆகியோர் டெல்லிக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.
எனவே அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த அனுப்பிரியா பட்டேல், பீகாரை சேர்ந்த சுசில் ஆகியோருக்கும் அமைச்சரவை பதவி வழங்கப்படலாம் என பேசப்படுகிறது.
இவர்களை தவிர லோக் ஜனசக்தி கட்சியின் 5 எம்பி களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள பாரஸ்ட் மற்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் பிரதிநிதிகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.
மத்திய அமைச்சரவையில் பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகளை கவனித்து வருவதால் மத்திய அமைச்சர்களாக இருந்த ராம்விலாஸ் பஸ்வான், சுரேஷ் ஆகியோர் காலமானதாலும் மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






