பொய் சொல்லும் திமுக… உலகத்தரத்தில் மதுரையில் எய்ம்ஸ்! பிரசாரத்தில் மோடி ஆவேசம்!
மதுரையில் உலகத்தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்படும்; இனியும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று என்று மதுரை பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசினார்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக மதுரை வந்த பிரதமர் மோடி, இன்று பாஜக – அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். பிரதமர் மோடி, “வெற்றிவேல், வீரவேல்” என்ற முழகத்துடன் தனது உரையை தொடங்கினார். எல்லோரும் நல்லா இருக்கீங்களா? மதுரை வந்ததில் மிக்க மகிழ்ச்சி என தமிழில் பேசிய பிரதமர் மோடி, பின்னர் ஆங்கிலத்தில் உரையை தொடர்ந்தார். மோடி பேசியதாவது:
தமிழ் பண்பாட்டின் முக்கிய மையமாக மதுரை திகழ்கிறது . புண்ணிய பூமியாக விளங்குகிறது. உலகத்தின் தொன்மை மொழியான தமிழை, சங்கம் வைத்து வளர்த்தது மதுரை. மறைந்த தென் மாவட்ட தலைவர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன். 1980ல் எம்ஜிஆர் ஆட்சியை மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சி கலைத்தது.அப்பொழுது தென் தமிழக மக்கள் எம்.ஜி.ஆருக்கு உறுதுணையாக இருந்தனர்.எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த மதுரை வீரன் படத்தை யாராலும் மறக்க முடியாது.
மத்திய அரசு, தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. சாலை போக்குவரத்து, ரயில்வே கட்டுமானம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து கிராமங்களுக்கும் இணையதள சேவை கொண்டு வர மத்திய அரசு திட்டம் வகுத்து வருகிறது.
மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும். மதுரையில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவாகவும், சிறப்பாகவும் உருவாக்கப்படும். எனவே இந்த விஷயத்தில் பொய் பிரசாரம் செய்து வரும், இல்லாததை பேசி வரும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இனியும் பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
2011ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில், திமுக அங்கம் வகித்த அமைச்சரவையில்தான் ஜல்லிக்கட்டைத் தடை செய்தார்கள். அதை காட்டுமிராண்டித்தனம் என்று ஒரு மூத்த அமைச்சர் சொன்னார். இப்போது சொல்லுங்கள். காங்கிரஸும் திமுகவும் அவர்கள் நிலையை நினைத்து வெட்கப்பட வேண்டும். 2016-17இல் இந்த மக்கள் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று நினைத்தபோது அவர்கள் மனவேதனை எனக்குப் புரிந்தது. அதனால்தான் நான் உடனடியாக ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தேன்.
திமுகவும் காங்கிரஸும் நமக்கான பாதுகாப்பையோ, கண்ணியத்தையோ உத்தரவாதப்படுத்த முடியாது. சட்டம்- ஒழுங்கு அவர்களால் சீர்குலைந்தது. திமுகவினர் அவர்கள் குடும்பப் பிரச்சினையில் இந்த மதுரை வன்முறை நகரம், கொலை நகரம் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கினார்கள். திமுகவும் காங்கிரஸும் திரும்பத் திரும்ப பெண்களை அவமானப்படுத்துகின்றன. இது எனக்கு ஆச்சர்யம் தரும் விஷயமல்ல அது அவர்கள் இயல்பு.
மதுரை நகரம் தூங்கா நகரம். இந்த நகரம் எப்போதும் தூங்கியதே இல்லை. விழித்திருக்கும் நகரம் இது. இந்த நகரம் அரசியல் யதார்த்தத்திற்காகவும் விழித்திருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும் விஷயத்திலும் மதுரை விழிப்புடன் இருக்கும் என்று நம்புகிறேன் என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக – பாஜக வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




