அனைத்து குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்த மம்தா..!
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வாக்குறுதி அளித்துள்ளார்.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில் இதற்கான தேர்தல் அறிக்கையை முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஒரு கோடியே 60 லட்சம் குடும்பத்தினருக்கு மாதம் 500 ரூபாயும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட குடும்ப தலைவியின் வங்கி கணக்கில் நேரடியாக சமர்ப்பிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு 4% வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற வழிவகுக்கும் கார்டு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டு உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சில பிரிவினரை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டுக்கு 10 லட்சம் புதிய சிறுகுறு தொழில் நிறுவனங்களும் 2000 பெரிய தொழிற்சாலைகளும் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.






