வெங்காயம் வாங்க சந்தைக்கு போக வேணாம் – இனி ரேஷன் கடைகளில் கிடைக்கும்
தமிழ்நாட்டில் வெங்காய விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் செப்டம்பர் 3-ம் தேதி முதல் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இதன் மூலம், நகர்ப்புறங்களில் மக்கள் வெங்காயம் வாங்க சந்தைக்கு போக வேண்டாம், வெங்காயம் இனி ரேஷன் கடைகளில் கிடைக்கும் என்பதால் ரேஷன் கடைகளிளேயே வாங்கலாம். வெளிச்சந்தையில் அதிகரித்து வரும் வெங்காய விலையைக் கட்டுப்படுத்தவும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கவும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக, நகர்ப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலமாக ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
சட்டப்பேரவையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க சட்டமன்றக் குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்த நிலையில், உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் இன்று (01.09.2026) சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் வெங்கடரமணன் பேசியதாவது: “விவசாயிகளின் தோழன் முதலமைச்சர் விஜயின் ஆட்சியில் மக்கள் நலன் மற்றும் விவசாயிகளின் நலன் சார்ந்த முயற்சிகளும் செயல்பாடுகளும் ஒருபோதும் நிற்காது. அந்த அடிப்படையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பின்வருமாறு:ஜூலை 6-ம் தேதி விலை கண்காணிப்புக் குழு கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இந்த விலை கண்காணிப்புக் குழு கூடுவது என்றும் தேவைப்படும் நேரங்களில் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டுறவு சங்கங்களின் கூட்டுறவு கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்து விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் தொடர் நடவடிக்கையாக அத்தியாவசிய பொருட்களின் விலை விவரங்கள் தினந்தோறும், வாராவாரம், மாத அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதே நேரத்தில், இதற்கு முந்தைய ஆட்சி காலங்களில் இந்த விலை கண்காணிப்பு குழு கூட்டமானது ஐந்தாண்டுகளுக்கு இரண்டு முறை மட்டுமே நடந்துள்ளது. அதாவது நவம்பர் 2023 மற்றும் ஏப்ரல் 2024 மட்டுமே கூட்டப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்சமயம் ஈரான் போர் காரணமாக வாகன எரிபொருள் விலை ஏற்றம், போக்குவரத்து செலவு உயர்வு, தற்போது அண்டை மாநிலங்களில் நிலவும் மாறுபட்ட காலநிலைகளின் தாக்கம் மற்றும் வெங்காய உற்பத்தி முதன்மையாக விளங்கும் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களில் இருந்து வரத்து குறைவு காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.56 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் ஏழை எளிய மக்கள், நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெங்காயம் விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்தும் வகையில் மக்களின் நலன் காக்கும் முதலமைச்சர் விஜயின் அரசு தேசிய கூட்டுறவு வேளாண்மை விற்பனை நிலையம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக முதல் கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு நியாயமான முறையில் விநியோகிக்க அரசு முடிவு செய்து, ஒரு கிலோ 35 ரூபாய்க்கு நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள நியாய விலை கடைகள் மூலமாக விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக நகர் பகுதிகளில் அமைந்துள்ள 8,739 நியாய விலைக் கடைகளில் அதாவது 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் கொண்ட நகர் பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். மேற்கண்ட தேசிய கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக இணைந்து தேவைப்படும் கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அமைச்சர் வெங்கட்ராமன் அறிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




