--- --:--:-- --

சந்தர்ப்பவாதத்தால் சபாநாயகருக்கு சரிவு? ஆணவத்தோடு ஆடுவதாக அதிமுகவினர் கடுப்பு…

danapala 01

சந்தர்ப்பவாத போக்குடன் நடந்து கொள்வதாகவும், அதிமுவினர் யாரையும் மதிக்காமல் வெற்றி மிதப்புடன் வலம் வருவதாகவும், அவிநாசி அதிமுக வேட்பாளரான சபாநாயகர் தனபால் மீது, அக்கட்சியினர் கடும் வெறுப்பில் உள்ளனர். இது, அவிநாசியில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் என்று கட்சியினர் கவலையடைந்துள்ளனர்.

 

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் 6ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவ்வகையில், சட்டமன்றத்திற்கே சபாநாயகராக இருந்து வரும் தனபால் போட்டியிடும் அவிநாசி (தனி) தொகுதி, முக்கியத்துவம் பெறுகிறது.

 

இத்தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் சபாநாயகர் ப. தனபாலுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. திமுக சார்பில், ஆதி தமிழர் பேரவை அதியமான் இங்கு போட்டியிடுகிறார். அதுதவிர, அமமுக கூட்டணியில், தேமுதிக மாவட்ட மகளிரணி செயலாளர் மீரா களமிறக்கப்பட்டுள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் சார்பில் ஏ.வெங்கடேஸ்வரன், சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் சோபா உள்ளிட்டவர்களும் களத்தில் உள்ளனர்.

ஆதி தமிழர் பேரவை சார்பில் போட்டியிடும் அதியமான்,

 

இவர்களில், ஆளும் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தனபால், மீண்டும் சீட் பெறுவதற்கு மன்றாடி, கெஞ்சிக்கூத்தாடி, இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். முதலில் இத்தொகுதி, அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவுக்கு, அதன் தலைவர் எல்.முருகன் போட்டியிட ஏதுவாக ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருந்தது. இதனால் தூக்கத்தை தொலைத்து, நிம்மதியின்றி புலம்பிக் கொண்டிருந்த சபாநாயகர் தனபால், கொங்கு மண்டல அதிமுக பொறுப்பாளரான அமைச்சர் வேலுமணியிடமும், அதிமுக தலைமையிடமும் முட்டிமோதி, மீண்டும் சீட் பெற்றுள்ளார்.

 

அவிநாசியில் போட்டியிடும் தேமுதிக மாவட்ட மகளிரணி செயலாளர் மீரா
அவிநாசியில் போட்டியிடும் தேமுதிக மாவட்ட மகளிரணி செயலாளர் மீரா

 

ஆனால், தனபால் அவ்வளவு எளிதில் அவிநாசி தொகுதியில் வெற்றி பெறுவதற்கான சாதகமான நிலை அப்போது இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம், கடந்த நான்கரை ஆண்டுகளாகவே அவிநாசி தொகுதிப்பக்கம் தலைகாட்டாமல் இருந்து வந்தார். தொகுதி மக்களின், அவ்வளவு ஏன் கட்சி நிர்வாகிகளின் வீட்டு சுக – துக்கங்களில் கூட அவர் பங்கெடுத்ததில்லை. மக்களிடம் குறைகளை கேட்டுப் பெற்றதில்லை.

 

தனபாலின் இந்த அணுகுமுறையை, நமது ‘குற்றம் குற்றமே’ வார இதழ் சுட்டிக்காட்டியது. அதன் பின்னர், சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வந்ததும் தனபால் சுதாரித்து, விழித்துக் கொண்டார். அதிமுகவினர் தேர்தல் வேலை செய்ய வேண்டுமே என்பதற்காக, தொகுதி மீதும் கட்சியினர் மீதும் திடீரென பாசமழை பொழியத் தொடங்கினார். அதிமுக நிர்வாகிகளின் பெயரைக்கூட முழுமையாக தெரிந்து வைத்திருக்காத தனபாலுக்கு அதிமுகவினர் மீது பாசம் பொத்துக் கொண்டு வந்தது.

 

கடந்த ஓராண்டில் தொகுதிக்குட்பட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகளின் வீட்டில் நடந்த நல்லது, கெட்டது என்னனென்ன என்று பெயருடன் பட்டியலை கேட்டு வாங்கினார். அவர்களின் ஒவ்வொருவரின் வீட்டுக்கு போய் விசாரித்து, ‘ஐஸ்’ வைத்தார். அடடே, தேர்தல் நேரத்திலாவது சபாநாயகருக்கு இந்த எண்ணம் வந்திருக்கிறதே. இனிமேல் அதிமுக நிர்வாகிகளோடு தனபால் இரண்டற கலந்திருப்பார்; சகஜமாக பழகுவார் என்றெல்லாம் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மனப்பால் குடிக்கத் தொடங்கினர்.

ஆனால், அதெல்லாம் தேர்தலில் சீட் பெறுவதற்காக தனபால் போட்ட கபட நாடகம் என்று இப்போது உணரத் தொடங்கிவிட்டதாக, பெயர் வெளியிட விரும்பாத அதிமுக நிர்வாகிகள் ”குற்றம் குற்றமே” வார இதழிடம் தெரிவித்தனர். இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

 

சபாநாயகர் தனபால், இந்த நான்கரை ஆண்டுகளில் தொகுதிப்பக்கம் எட்டிப்பார்க்கவில்லை. கொரோனா காலத்தில் கூட, வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு உதவவில்லை. அதிமுக நிர்வாகிகள் பலர், ஓடோடி உதவிக்கரம் நீட்டினார்கள். ஆனால் தேர்தல் நெருங்கி வந்ததும், அவிநாசி நியாபகம் தனபாலுக்கு வந்துவிட்டது. திடீரென ஓடோடி வந்தார், கட்சி நிர்வாகிகளிடம் கரைந்து உருகினார்.

 

இப்படி, தேர்தலில் சீட் பெறும் வரை பூனை மாதிரி பம்மிக் கொண்டிருந்த தனபால், இப்போது புலியாக உறுமிக் கொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக, அதிமுக வேட்பாளரை எதிர்த்து, திமுக போட்டியிடவில்லை என்றதும் அவரது ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. தன்னை எதிர்த்து வலுவான வேட்பாளர் இல்லை; மற்ற கட்சிகள் சார்பிலும் சொல்லிக் கொள்ளும்படி வேட்பாளர்கள் இல்லை. எனவே என் வெற்றி உறுதிச் செய்யப்பட்ட ஒன்று நினைக்க ஆரம்பித்தார்.

 

இதனால் மீண்டும் பழைய தனபாலாக மாறினார். அவரது செயல்பாடுகள் மீண்டும் பழையபடி மாறத் தொடங்கிவிட்டன. கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை; எடுத்தெறிந்து பேசுகிறார். கட்சியினர் ஆதரவு இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்பதை அவர் மறந்துவிட்டார். பூண்டியை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் சபாநாயகருக்காக பல லட்சம் செலவிட்டிருக்கிறார். ஆனால், தனபால் அதையெல்லாம் துளியும் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. முன்னாள் எம்.எல்.ஏ. இன்னாள் கட்சி நிர்வாகிகள் என்று யாரையும் தனபால் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. ஆரம்பத்தில் இருந்த பணி இல்லாமல் நிர்வாகிகளிம் சீறி விழுகிறார். அசால்டா வெற்றி என்று நம்பி, அதிமுகவினரின் தயவு தேவையில்லை என்று அவர் கருதி வருகிறார்.

சீட் பெறுவதற்கு முன்பே தனபாலின் அணுகுமுறை பற்றி, எஸ்.பி. வேலுமணி, மற்றும் எடப்பாடி வரை புகார் சென்றிருந்ததால்தான் இம்முறை அவிநாசி தொகுதியை மீண்டும் பெறுவதற்கு தனபால் குட்டிக்கரணம் போட வேண்டியிருந்தது. முதலில் தனது மகனுக்கு சீட் பெற ஆசைப்பட்டார். ஆனால், தனக்கு கிடைப்பதே குதிரைக்கொம்பு என்ற என்ற நிலைவந்ததும், மண்டியிட்டு போராடி, தனக்கு சீட் வாங்கிக் கொண்டார்.

 

ஆனால், சீட் கிடைத்ததும் சபாநாயகரின் சந்தர்ப்பவாதம் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. தன்னை எதிர்த்து திமுக நேரடியாக களமிறங்கவில்லை; கூட்டணி கட்சியான ஆதி தமிழர் பேரவைக்கு ஒதுக்கி இருப்பதால், யார் தயவும் இல்லாமல் ஜெயித்துவிடலாம் என்று சபாநாயகர் தனபால் மிதப்பில் இருக்கிறார். இந்த மனப்போக்கால், அதிமுகவினர் யாரையும் அவர் மதிப்பதில்லை.

 

அவிநாசி நகரம், ரூரல் பகுதி என அவிநாசி அதிமுகவில் பரவலாக சபாநாயகர் தனபால் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. சபாநாயகரின் இந்த போக்கு தொடருமானால், அதிமுகவினர் யாரும் அவருக்காக முழு மனதோடு தேர்தல் வேலை செய்வார்களா என்பது சந்தேகம்தான். அதிமுகவினருக்கே இந்த நிலையென்றால், பாஜக போன்ற கூட்டணி கட்சியினர் என்ன செய்வார்கள். ஏற்கனவே அமமுகவுக்கு திமுக மறைமுகமாக வேலை பார்க்க தொடங்கிவிட்டதாக பேச்சு உள்ளது. இந்த நேரத்தில் தனபால் ஆணவத்தில் ஆட்டம் போடுவது, அவருக்கு மட்டும் அழிவைத் தராது; அதிமுகவுக்கும் பெரும் சறுக்கலாக அமைந்துவிடும்.

 

தனபாலின் இந்த செயல்பாடுகள் குறித்து, அமைச்சர் வேலுமணி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் கவனத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். ஏனெனில் இவரின் போக்கால் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி வளர்த்த அதிமுக எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. தேர்தலுக்கு நாட்கள் மிகக்குறைவாக இருப்பதால், உடனடியாக சபாநாயகர் தனபால் தனது சந்தர்ப்பவாத அரசியல்தனத்தை விடுத்து, சாமானியனாக மாறி, பொதுமக்களை சந்திக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் மீண்டும் வெற்றிக்கனியை ருசிப்பது சந்தேகம்தான் என்று, அதிமுக நிர்வாகிகள் நம்மிடம் கூறினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon