புதுச்சேரியில் இந்த தேர்தலிலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார் ரங்கசாமி..!
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் ரங்கசாமி இந்த தேர்தலிலும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். ஏநாம் தொகுதியில் போட்டியிடுவதற்காக நாளை மறுநாள் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் திடீரென தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்த ரங்கசாமி நேற்று இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். 2011 தேர்தலில் அவர் கதிர் கிராமு, இந்திரா நகர் என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.
தட்டாஞ்சாவடியில் கடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் ரங்கசாமி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் மீண்டும் தட்டாஞ்சாவடியில் தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் ரங்கசாமி இந்த முடிவை அதிரடியாக எடுத்திருப்பதாக என் ஆர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இங்கு போட்டியிட சீட் கேட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோக் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் வெங்கடேசனுக்கு தட்டாஞ்சாவடி பகுதியை அளிப்பதாக பாஜக உறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில் அவருக்கு சீட் போகாமல் இருப்பதை தடுக்கும் வகையில் ரங்கசாமி திடீரென தட்டாஞ்சாவடியில் போட்டியிடுவது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.






