ஏடிஎம் இயந்திரத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற போதை முதியவர்..!
மதுரை அருகே முதியவர் மதுபோதையில் ஏடிஎம் இயந்திரத்தில் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்ற வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தனியார் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏடிஎம் மையத்துக்குள் முதியவர் ஒருவர் மது போதையில் தள்ளாடியபடி சென்றுள்ளார். முதியவர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் வெளியே காத்திருந்தவர் உள்ளே சென்றுள்ளார். அப்போது அந்த முதியவர் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக புதிய வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அவரை அங்கிருந்தவர்கள் எடுத்துக்கூறி அப்புறப்படுத்தியுள்ளனர். போதை முதியவர் வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றது சமூக இணையதளத்தில் வைரலாகி வருகிறது.






