சர்ச்சை சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றது பள்ளிக் கல்வித்துறை!
காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கான செலவைப் பள்ளி நிர்வாகம் ஏற்குமாறு வெளியான சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுவதாகப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளைத் தலைமை ஆசிரியர்கள் தங்களின் சொந்த நிதியில் மேற்கொள்ள வேண்டுமென, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டத்தின் தொடக்க விழா வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை அரசே ஏற்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்திருந்தார்.
காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள பள்ளிகளுக்கு மாவட்டக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்டுள்ள இது தொடர்பான சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் காலை உணவுத் திட்டத்திற்கான பெயர்ப்பலகைகள், தட்டுகள், டம்ளர்கள் மற்றும் பிற வசதிகளுக்கான செலவை அரசே ஏற்க வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், கடலூரில் காமராஜர் காலை உணவுத் திட்டம் சார்ந்து வெளியான சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. கவனக்குறைவாகச் செயல்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




