--- --:--:-- --

கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவா? போட்டுக் கொண்டவர்கள் சொல்வது என்ன?

corona vaccine 01

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பக்க விளைவு எதுவும் ஏற்படவில்லை என்று, தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் நாளான நேற்று மட்டும் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

 

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நேற்று தொடங்கியது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்கு மேற்பட்டோர் 59 வயதுக்குள் இருக்கும் இணை நோய்கள் கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ. 250 கட்டணத்திலும் போடப்படுகிறது.

 

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவிட் தடுப்பூசியை போட்டு கொண்டார். பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசி, அவருக்கு போடப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர், ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரபலங்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

 

முதல் நாளான நேற்று மட்டும் 1.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு நேற்று நண்பகல் 12 மணியில் இருந்து தடுப்பூசி போடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல மையங்களில் காலையில் இருந்தே முதியவர்கள் ஆர்வமாக வரத்தொடங்கினர். நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது.

 

டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகிகள் கூறுகையில், மூத்த குடிமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அவர்களுக்கு இருந்த ஆர்வத்தை பார்க்கும்போது எங்களுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது’ என்றார். தடுப்பூசி போட்டுக் கொண்ட பல முதியவர்களும், தங்களுக்கு எந்த பக்க விளைவோ, வேறு பாதிப்போ ஏற்படவில்லை எனவும், எப்போதும் போல் வழக்கமான பணிகளை செய்வதாகவும் உற்சாகமுடன் கூறினர்.

 

இதன்மூலம், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்க விளைவு வருமோ என்ற பொதுமக்களின் கவலைக்கு விடை கிடைத்துள்ளது. பொதுமக்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, கொரோனா இல்லாத இந்தியா உருவாக வழி வகுக்க வேண்டும் என்று, அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon