வீடியோவை ஷேர் செய்தால் பெட்டியில் வரும் திருப்பதி லட்டு..!
திருப்பதி ஏழுமலையான் கோவில் என்றால் எல்லாருக்குமே உடனே நினைவுக்கு வருவது லட்டு தான். திருப்பதி செல்லும் பக்தர்கள் பலரும் எவ்வளவு நேரம் ஆனாலும் இந்த லட்டை வாங்காமல் வீடு திரும்பமாட்டார்கள். திருப்பதி லட்டு வேறு எங்கேயும் கிடைக்காது. சில மாநிலங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் திருப்பதி லட்டு என்று விற்கப்படும். ஆனால், திருமலை திருப்பதி லட்டுக்கு என்று பிரத்யேக சுவை உள்ளது.
இந்த திருப்பதி லட்டு, திருப்பதியை தவிர எங்குமே கிடைக்காது. அவ்வளவு எளிதாக வெளியில் யாருமே வாங்கிவிடவும் முடியாது. திருப்பதி லட்டின் தயாரிப்பு, சேமிப்பு, விற்பனை மற்றும் விநியோகம் அனைத்தும் திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பில் நடைபெறுகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவில், தனது முகநூல் வலைதளப்பதிவை விரும்பி, 30 பேருக்கு ஷேர் செய்யும் நபருக்கு 30 திருப்பதி கோவில் லட்டுகள் இலவசமாக வழங்குவதாக கூறியுள்ளார்.
மற்றொரு வீடியோவில், தனது சேனலை பின்தொடர்பவர்கள் மற்றும் வீடியோவுக்கு லைக், கமெண்ட் மற்றும் ஷேர் செய்பவர்களுக்கு லட்டு பெட்டிகளில் அனுப்பப்படும் என குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் திருப்பதி தேவஸ்தானத்தை தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
புனிதமான திருப்பதி லட்டு பிரசாதத்தை சமூக வலைதளப் பிரசாரத்துக்கு பயன்படுத்துவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தேவஸ்தான முதன்மை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி கே.வி.முரளிகிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். விசாரணையில் உண்மைகள் தெரியவந்த பிறகு, தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் லட்டு பிரசாதம் வழங்குவதற்கு குறிப்பிட்ட விதிமுறைகளும், வரம்புகளும் இருக்கிறது. ஒருவர் காசுகொடுக்கிறார் என்பதற்காக அதிக எண்ணிக்கையில் நேரில் கூட போய் வாங்கிவிட முடியாது. இப்படியான சூழலில் தமிழகத்தைச் சேர்ந்த சண்முகத்துக்கு அதிக எண்ணிக்கையிலான லட்டுகள் எவ்வாறு கிடைத்தது. வீடியோவில் காட்டப்பட்டுள்ள லட்டுகள் உண்மையில் திருப்பதி லட்டு பிரசாதமா? திருமலையில் இருந்து பெறப்பட்டவையா? அல்லது வேறு வழியில் வாங்கியதா? என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




