--- --:--:-- --

36 புதிய சானிட்டரி நாப்கின் இயந்திரம்..!

5

சென்னை விமான நிலையத்தில் உள்ள பெண்கள் கழிப்பறைகளில், செப்டம்பர் மாத இறுதிக்குள் 36 புதிய சானிட்டரி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படவுள்ளன. இந்த வசதி அக்டோபர் 1 முதல் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை லதா ராவ், ஹைதராபாத் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தபோது திடீரென மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. அப்போது நாப்கின் கிடைக்காமல் அவதிப்பட்ட தனது அனுபவத்தை அவர் பகிர்ந்து கொண்டதை அடுத்து, விமான நிலையத்தில் மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாதது கவனம் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டு உள்ள பதிவில், “நான் ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தேன். அப்போது எனக்கு திடீரென மாதவிடாய் வந்துவிட்டது. பொதுவாகப் பயணங்களின் போது சானிட்டரி நாப்கின்களை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இம்முறை அதை எடுத்து வைக்க மறந்துவிட்டேன். விமான நிலையத்தில் பணம் கொடுத்தால் நாப்கின் கொடுப்பார்கள். அதுகுறித்து கேட்ட போது அந்த ஸ்கிம் எல்லாம் தூக்கிவிட்டார்கள் என்றார்கள்.

 

 

இதையடுத்து, எனது கேட் 1-ல் இருந்து கேட் 7 அருகே உள்ள மருந்தகத்திற்கு நாப்கின் வாங்குவதற்காக விரைந்து சென்றேன். ஆனால், அங்கிருந்த ஊழியர் கவுண்டருக்குத் திரும்பும் வரை காத்திருந்து நாப்கினை வாங்க வேண்டியிருந்தது. அவர் திரும்பி வருவதற்குள் விமானத்தில் பயணிகள் ஏறும் பணி தொடங்கிவிட்டது.

 

 

ஏன் இதை பற்றி சமூக வலைதளத்தில் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள்.
மாதவிடாய் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. வீட்டில் இருந்து கிளம்பும் முன் சாவி எடுத்துவிட்டோமா என்று நினைப்பதை போல் நாப்கின் எடுத்துவிட்டோமா என்று யோசியுங்கள். உங்களுக்கு இல்லை என்றாலும் யாருக்காவது அது உதவும்” என்றார்.

 

 

இந்த புகார் குறித்துப் பதிலளித்த விமான நிலைய அதிகாரிகள், தவறாகப் பயன்படுத்தப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து இயந்திரங்கள் மூலம் நாப்கின்கள் வழங்குவது நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தனர். தற்காலிக நடவடிக்கையாக, பெண்கள் கழிப்பறைகளுக்குள் தொலைபேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளன.

 

சானிட்டரி நாப்கின்கள் தேவைப்படும் பயணிகள் அந்த எண்ணிற்கு அழைக்கலாம் என்றும், அழைத்த இரண்டு நிமிடங்களுக்குள் பெண் ஊழியர் ஒருவர் நாப்கினை அவர்களிடம் வழங்குவார் என்றும் இந்திய விமான நிலையங்களின் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

36 புதிய இயந்திரங்கள் பொருத்தப்படும் வரை இந்த தற்காலிக ஏற்பாடு தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவை பயன்பாட்டிற்கு வந்ததும், பெண் பயணிகள் கழிப்பறைகளிலிருந்தே நேரடியாக சானிட்டரி நாப்கின்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர்கள் கூறினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon