தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் மாலை நேரத்தில் பெய்த மழையால் பணி முடிந்து வீடு திரும்பும் மக்கள் அவதி அடைந்தனர்.
அதேபோல, அயனாவரம், கொளத்தூர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட ஈசிஆர் சாலையிலும், தரமணி, பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட ஓஎம்ஆர் சாலையிலும் கனமழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி பயணித்தனர்.
அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மதுரவாயல், நெற்குன்றம், போரூர், வானகரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக பெய்த மழையால் இதமான சூழல் நிலவியது. இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் இன்று மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கிடையே, உள் தமிழ்நாட்டில் வரும் 7ஆம் தேதி வரை வெப்பத்தின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், 4 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் உயரக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




