புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமிக்கு உத்தரவு..!
புதுவையில் வரும் திங்கள்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.
அவர் புதுவையில் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் ஆளுநர் மாளிகையின் அறிக்கையில் வரும் திங்கட்கிழமை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல் அமைச்சர் நாராயணசாமியை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மாலை 5 மணிக்குள் வாக்கெடுப்பு நிறைவு செய்யவும். வாக்கெடுப்பின் போது உறுப்பினர்கள் தங்களது கைகளை உயர்த்தி காட்ட வேண்டும் எனவும் முழு நிகழ்ச்சியும் காட்சி பதிவு செய்யப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க தலைமை செயலர் மற்றும் டிஜிபி யை துணைநிலை ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். புதுவை சட்டப்பேரவையில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் மூவர் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர்.
ஒரு காங்கிரஸ் உறுப்பினர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் நான்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். தற்போதைய நிலையில் ஆளும் கட்சியின் பத்து உறுப்பினர்கள் உள்ளனர். திமுக உறுப்பினர்கள் மூவரும், ஒரு சுயேச்சையும் ஆதரவு தருகின்றனர்.
அதே வேளையில் எதிர்க் கட்சி வரிசையில் என்ஆர் காங்கிரஸ் 7 பேரும், அதிமுகவில் 4 பேரும், பாரதிய ஜனதாவை சேர்ந்த 3 நியமன உறுப்பினர்கள் உள்ளனர்.






