தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழப்புக்கு காரணம் நிமோனியா காய்ச்சல் தான்..!
கோவையில் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நிமோனியாவால் தான் அந்த குழந்தை இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது.
கோவை மசகாலிபாளையம் அருகே வசிக்கும் பிரசாத்- விஜயலட்சுமி தம்பதியின் இரண்டாவது குழந்தையான மூன்று மாத ஆண் குழந்தைக்கு அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சுகாதாரத் துறையால் நடத்தப்பட்ட முகாமில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது.
பென்டாவேலன்ட் ரோட்டா தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து குழந்தைக்கு போடப்பட்டுள்ளது. வீட்டிற்கு சென்ற பிறகு குழந்தை பேச்சு மூச்சின்றி இருந்துள்ளது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளது.
தடுப்பூசி போட்டதால் குழந்தை இறந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் உடற்கூறு ஆய்வில் நிமோனியா காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. அண்மையில் தடுப்பூசி போட சென்ற போது குழந்தைக்கு சளி, காய்ச்சல் இருந்தால் திரும்பி வந்ததாக தந்தை பிரசாத் தெரிவித்துள்ளார்.
பிரசாத்தின் குழந்தையுடன் சேர்த்து 14 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் மற்ற குழந்தைகள் நலமுடன் இருப்பதாக சுகாதார துறை தெரிவித்தது. நிமோனியா காய்ச்சலை கவனிக்காமல் விட்டால் தான் குழந்தை இறந்ததாக தெரியவந்துள்ளது.






