கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை நாளை ( டிசம்பர் 31 )முதல் மீண்டும் தொடங்குவதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள உதகைக்கு செல்ல யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை முதல் உதகை மலை ரயில் சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளது. முகக்கவசம்,சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பயணிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும்,முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும்,கொரோனா காலத்திற்கு முன்னர் வசூலிக்கப்பட்ட கட்டணமே பெறப்படும் ( சாதாரண கட்டணம் ) என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்,தற்போது உதகையில் பனிமூட்டத்துடன் இதமான சூழல் நிலவி வருவதாலும்,தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டை கொண்டாடும் வகையிலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மலை ரயிலில் பயணம் செய்து கொண்டே உதகை நிலவும் இதமான சூழலை அனுபவிப்பது அலாதி சுகம்.இதனால் உதகை மலை ரயில் உலகம் முழுவதும் பெயர் பெற்றுள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.