சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது..!

கரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. வரும் ஜனவரி 19ஆம் தேதி வரை ஐயப்பனை தரிசிக்க இணையதளம் மூலம் ஒரு லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

 

கொரொனா கட்டுப்பாடுகளுக்கு இடையே இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 15 ஆம் தேதி திறக்கப்பட்டது. நோய் பரவலை தடுக்கும் வகையில் முதலில் நாளொன்றுக்கு ஆயிரம் பேரும், வார இறுதி நாட்களில் 2000 பேருக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

 

பின்னர் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று நாள் ஒன்றுக்கு 2000 பேர் வரை பக்தர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. கடந்த 26ஆம் தேதி மண்டல பூஜை முடித்ததும் கோவில் நடை அடைக்கப்பட்ட நிலையில் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இதை தொடர்ந்து கூடுதல் பக்தர்களை அனுமதிப்பதற்காக நேற்று ஆன்லைன் முன்பதிவு தொடங்கப்பட்டது. இந்நிலையில் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று காலை திறக்கப்படுகிறது. இந்த முறை சபரி மலைக்கு வரும் பக்தர்கள் ஆர்‌டி‌பி‌சி‌ஆர் நெகட்டிவ் சான்றிதழுடன் வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

மகர விளக்கு பூஜை நடைபெறும் 20 நாட்களில் அய்யப்பனை தரிசிக்க மொத்தம் ஒரு லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.


Leave a Reply