சுயசார்பு இந்தியா என்பதில் உறுதி கொள்வோம் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி உரை
நாட்டின் 74 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை கொத்தளத்தில் பிரதமர் மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். அவரது உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள், வீரர்களை வணங்குவதற்கான சந்தர்ப்பம் இது.
கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்களப் பணியாளர்கள் அத்துனை பேருக்கும் நன்றி. நம் நாட்டின் எல்லையை காக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றி.
மழை,வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இந்தியா சந்தித்து வருகிறது. அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவோம். ஒரே நாடு என்ற ஒற்றுமையுடன் அனைத்து சவால்களையும் இந்தியா எதிர்கொண்டு வருகிறது.
உலக நாடுகள் அனைத்திற்கும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் முன்னுதாரணமாக இருந்தது. புதிய குறிக்கோள்களை முன்வைத்து அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவோம். உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிப்போம். சுயசார்பு இந்தியா என்பதில் நாம் உறுதியுடன் இருக்க வேண்டும் என
பிரதமர் மோடி தமது உரையில் வலியுறுத்தினார்.
டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றும் முன் ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கொரோனா காரணமாக சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் நடைபெற்ற செங்கோட்டையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றி சிறப்பு அழைப்பாளர்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





