அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ்..? போடி தொகுதி முழுவதும் முளைத்த போஸ்டர்..!! அதிமுகவில் மீண்டும் “கலகம்”..?
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்தத் தொகுதியான போடி முழுவதும் மட்டுமின்றி தேனி மாவட்டத்தின் பல இடங்களில் அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ். என விதவிதமாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பையும் அதிமுகவில் கலகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற கேள்விக்கு பிள்ளையார் சுழி போல அமைச்சர் செல்லூர் ராஜூ கூறிய கருத்து அக்கட்சிக்குள் பெரும் பிரளயத்தை ஏற்படுத்துவது போல் அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.
எம்எல்ஏக்கள் கூடி முதல்வர் தேர்வு என செல்லூர் ராஜு கூறிய மறுநாளே, என்றும் முதல்வர் எடப்பாடியார் தான்.. அவரை முன்னிறுத்தியே தேர்தல் களம் காண்போம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கர்ஜித்ததிலிருந்து அதிமுகவில் இரு கோஷ்டிகளாக அமைச்சர்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமானது.
இதில் மதுரையைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான ஆர்.பி.உதயகுமாரோ முதல் நாள் எடப்பாடியார் தான் முதல்வர் என்று கூறிவிட்டு மறுநாள் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரையும் முன்னிறுத்தியே மக்களவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டசபை இடைத் தேர்தலை சந்தித்தோம். அதுபோல இப்போதும் தேர்தலை எதிர்கொள்வோம் என பல்டி அடித்தார்.
மூத்த அமைச்சரான ஜெயக்குமாரோ, முதல்வர் வேட்பாளர் குறித்து அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவதை தவிர்க்க வேண்டும். முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும். சின்னத்தை முன்னிறுத்தி வெற்றி காண்போம் எனக் கூறியிருந்தார்.

இப்படி அமைச்சர்கள் ஆளாளுக்கு கருத்துகளை கூறி சர்ச்சையான நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவரது தீவிர ஆதரவு கொங்கு பெல்ட் அமைச்கர்களான தங்கமணி, வேலுமணி போன்றோர் மவுனம் சாதிக்க ஓ.பி.எஸ் திடீர் என ஒரு டுவீட் போட்டார்.
அதில், 3-வது முறையாக அம்மாவின் ஆட்சி அமைப்பதே இலக்கு என குறிப்பிட்டிருந்த ஓ.பி.எஸ்., முதல்வர் வேட்பாளர் குறித்து எதுவும் குறிப்பிடாதது சர்ச்சைக்கு மேலும். வலுவூட்டுவதாகவே கருதப்பட்டது. மேலும் முதல்வர் வேட்பாளராக தம்மை முன்னிறுத்த கட்சிக்குள் தமது செல்வாக்கை காட்ட ஓபிஎஸ் காய் நகர்த்துவதாகவும் ஒரு பேச்சு எழுந்தது.
இந்த நிலையில் தான் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் சொந்த தொகுதியான போடி முழுவதும் நேற்றிரவு அடுத்த முதல்வர் ஓ.பி.எஸ் என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் பல இடங்களில் திடீரென ஒட்டப்பட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த போஸ்டர்களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்றும், 2021 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் ஓபிஎஸ் என்றும் விதவிதமான வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.
இதே போன்ற போஸ்டர்கள் ஓ.பி.எஸ்.சின் சொந்த மாவட்டமான தேனியின் பல ஊர்களிலும் மட்டுமின்றி, பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்.சின் வீட்டின் முன்பும் ஒட்டப்பட்டிருந்தது. இதில் ஓபிஎஸ் வீட்டின் முன் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் இன்று காலை அவசர அவசரமாக கிழிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இப்படி ஓ.பி.எஸ்.சை முதல்வர் எனக் கூறி அவரது சொந்த தொகுதி மற்றும் சொந்த மாவட்டத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர், அதிமுகவில் மீண்டும் ஒரு தர்ம யுத்தத்திற்கு வழிவகுக்குமோ? என தொண்டர்களை கலக்கமடையச் செய்துள்ளதாகவே தெரிகிறது.






