புற்றுநோய் மற்றும் வறுமையுடன் போராடி வரும் மாணவி..!
புத்தகம் எடுத்து பாடம் பயில வேண்டிய நிலையில் புற்றுநோயுடன் போராடி வருகிறார் திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர். பட்டாம்பூச்சியாய் பறந்து திரிய வேண்டிய பள்ளிப்பருவத்தில் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்கும் இந்த ராஜலட்சுமி தான் புற்றுநோய் என்ற துயரத்தை சுமந்திருக்கும் மாணவி.
வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்த செல்வகுமார் – வெங்கடேஸ்வரி தம்பதியின் மூன்றாவது மகள். பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றாம் வகுப்பு பயில வேண்டிய நேரத்தில் வலது காலில் தோன்றிய புற்றுநோய் கட்டி குடும்பத்தையே முடக்கிப் போட்டு உள்ளது.
ராஜலட்சுமியின் தந்தை செல்வ பெருமாளும் விபத்தில் சிக்கி வீட்டில் முடங்கி கிடக்கும் நிலையில் கொரோனாவால் பொது முடக்கம் வந்துவிட்டது. புற்றுநோய் கட்டி நான்காவது நிலையை எட்டி விட்டதால் 6 முறை சிகிச்சை அளித்த பின்னரே அறுவை சிகிச்சை செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
யார் யாரிடமோ கடன் வாங்கி மூன்று முறை ஹீமோ செய்தாகிவிட்டது. மீதமுள்ள ஹீமோவையும் அறுவை சிகிச்சையும் செய்து முடிக்கவேண்டும்.
அன்றாட தேவைகளுக்கு அல்லல்படும் பெற்றோரை கண்டு மனமுருகி வருகிறார் ராஜலட்சுமி. சூழ்ந்திருக்கும் வருமை, நீடித்திருக்கும் புற்றுநோய். காத்திருக்கும் அறுவை சிகிச்சை இவை அனைத்தையும் போக்க உதவி கோரி காத்திருக்கிறது ராஜலட்சுமியின் குடும்பம்.






