அம்பன் புயல் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் !
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த அதிதீவிர புயல் அம்பன் சூப்பர் புயல் எனப்படும் மிக கடும் புயலாக உருமாறியுள்ளது. தற்போது இந்த புயல் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரையை நோக்கி செல்கிறது. இந்த புயல் மேற்கு வங்கத்தின் திகார் மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகளுக்கு நடுவே நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையை தொடும் போது மணிக்கு 165 முதல் 175 கிலோ மீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றும், நாளையும் மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குனர் மகாபத்ரா தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் பாதிப்புக்குள்ளாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். புயலின் பாதிப்பை குறைக்க செய்துள்ள ஏற்பாடு குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அனைவரின் பாதுகாப்புக்காகவும் இறைவனை வேண்டிக் கொள்வதாக ட்விட்டரில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா சந்திக்க இருக்கும் இரண்டாவது சூப்பர் புயல் என்பதால் ஏற்படும் பாதிப்பு கடுமையாக இருக்க வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைவர் எஸ்என் பிரதான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்து அவர் 1999 ஆண்டு ஒடிசாவை இதுபோன்ற புயல் தாக்கியதை நினைவுகூர்ந்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள அம்பன் புயல் மனித இழப்பு மற்றும் அதிக பொருட் சேதத்தை ஏற்படுத்தலாம் என்று தெரிவித்த அவர் மீட்பு பணியில் ஈடுபட 53 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். புயல் பாதிப்பு அதிகம் ஏற்படகூடிய பகுதிகளான மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் தலைமைச் செயலாளர் உள்துறை செயலாளரை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல் படையை சேர்ந்த போதிய எண்ணிக்கையிலான குழுக்களும் எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளவும் மற்றும் மாநில அரசுக்குத் துணையாக செயல்படவும் தயார் நிலையில் உள்ளன என தெரிவித்துள்ளார். வங்கதேசத்தில் அம்பன் புயல் பேரழிவை ஏற்படுத்தும் என்று அஞ்சுவதால் பத்தொன்பது கடலோர மாவட்டங்களில் உள்ள 20 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
அவர்களுக்காக 13 ஆயிரத்து78 தங்குமிடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அட்லாண்டிக் கடலில் உருவாகும் நான்காம் வகை சூறாவளிகள் ஐ விட அம்பன் புயல் அதிக பாதிப்புகளை உண்டாக்க கூடும் என்று வங்கதேச பேரிடர் மேலாண்மை அமைச்சக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.






