தமிழகத்தில் 50% பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. அரசு ஊழியர்கள் சிறப்புப் பேருந்துகளில் பணிக்கு அழைத்து வரப்பட்டனர்.
கொரொனா பரவல் தடுப்புக்கான பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இன்று முதல் செயல்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வர சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையில் தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பணி செய்வோர் 39 பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி ஆகிய அறிவுறுத்தல்களை பின்பற்றி பேருந்தில் பயணித்தனர்.
இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏற்கனவே அரசு கூறியிருந்தபடி சொந்த செலவில் டிக்கெட் வாங்கி அவர்கள் பயணித்தனர். அனைத்து அரசு அலுவலகங்களில் சுழற்சி முறையில் 50 சதவீதம் பேர் பணியாற்றி வருகின்றனர். பணி முடிந்து வீடு திரும்புவதற்கும் சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.