கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் நடந்த விபரீதம்!
சுஜாதா பயோடெக் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் நிவாரண மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் தொழிற்சாலை உத்தரகாண்ட் மாநிலம் காசிபூரில் செயல்படுகிறது. தலைமை அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தவர் 47 வயதான சிவனேசன்.
சென்னை பெருங்குடியை சேர்ந்த இவர் முதுகலை வேதியியல் படித்துள்ளார். சுஜாதா பயோடெக் நிறுவனத்தில் 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார். என்பது நிவாரன் 19, ஹெர்பல் ஷாம்பூ, மெமரி விட்டா போன்ற பொருட்களை இந்த நிறுவனம் மூலம் தயாரித்து பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். தொழிற்சாலை இயங்கும் காசிபூரில் தான் நிறுவனத்தின் பொது மேலாளர் சிவநேசன் இருப்பான்.
சென்னைக்கு வந்த இவர் ஊரடங்கின் காரணமாக திரும்பி செல்ல முடியவில்லை. இந்நிலையில் வீட்டிலிருந்த சிவனேசனை அந்த நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் ராஜ்குமார் அழைத்து கொரொனா தடுப்பு மருந்து தயாரிக்கலாம் என யோசனை கூறியுள்ளார். அதற்கான தயாரிப்பு பணிகளில் கடந்த ஒரு மாதமாக தியாகராயநகரில் உள்ள டாக்டர் ராஜ்குமார் வீட்டில் வைத்து ஈடுபட்டுள்ளனர்.
சளி, தொண்டை கரகரப்புக்கு இருமலுக்கான மருந்துகளை இவர்களுடைய நிறுவனத்தில் தயாரிக்கின்றனர். இதற்கான மூலக்கூறுகள் எல்லாம் வேதியல் நிபுணரான சிவனேசன் கண்காணிப்பில் நடக்கும். அதன் அடிப்படையில் ஏற்கனவே உள்ள மூலக் கூறுகளை வைத்து மேலும் சில மருந்துப் பொருட்களை அதனுடன் சேர்த்து கொரொனா தடுப்பு மருந்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக சோடியம் நைட்ரேட்டை வாங்கி வந்து அதன் மூலம் புதிய வேதியல் கரைசலை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் எந்த புதிய மருந்தை தயாரித்தாலும் சிவனேசன் தான் அதை உட்கொண்டு சுயபரிசோதனை செய்து விடுவார் என அந்நிறுவன ஊழியர்கள் கூறுகின்றனர். அதைப் போன்று இந்த மருந்தை உட்கொண்டு டாக்டர் ராஜ்குமாருக்கும் கொடுத்துள்ளார்.
அதிக அளவிலான கரைசலை சிவனேசன் உட்கொண்டதால் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்துள்ளார். டாக்டர் ராஜ்குமார் சிகிச்சைக்குப்பின் நலம் அடைந்துள்ளார்.
டொசேஜ் அதிகம் உள்ள மருத்துவ மூலக்கூறுகளை பயன்படுத்தியதால் சுவாசம் நிறுத்தப்பட்டு இதயத்துடிப்பு நின்று இருக்கலாம் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. என்றாலும் ஆளும் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பிறகே முழுவிபரமும் தெரியவரும் என வழக்கை விசாரித்து வரும் தேனாம்பேட்டை காவல்துறையினர் கூறுகின்றனர்.
கொரொனா வேகமாக பரவிவரும் நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்க உலகின் பல நாடுகளும் களமிறங்கியுள்ளது. சரியான வழிமுறை இல்லாத முயற்சியின் விபரீதம் தான் இந்த உயிர் இழப்பு என மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.






